ஹரியானா மாநிலம், பச்கான் என்ற இடத்தில் சட்டவிரோதமாக சுரங்கத்தில் கற்களை வெட்டி எடுப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சுரேந்திர சிங் தலைமையில் போலிஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கற்களை வெட்டிக் கொண்டிருந்தவர்கள் போலிஸார் வருவதை அறிந்து அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது, லாரியில் தப்பிச் சென்றவர்களை வாகனத்தை நிறுத்தும்படி சுரேந்திர சிங் கூறியுள்ளார். ஆனால் லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தல் எதிரே இருந்த போலிஸார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் சுரேந்திர சிங் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் சில போலிஸார் படுகாயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உயரதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மேலும் தப்பிச் சென்றவர்களை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது பற்றி அறிந்த அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உயிரிழந்த போலிஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் போலிஸாரை லாரி ஏற்றி கொலை செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் கனிம வளங்களைச் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 21,450 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.