மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்பனா. இவர் 37 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தந்தை இறந்ததால் குடும்பம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இவரால் தனது பள்ளி படிப்பை தொடரமுடியவில்லை. அப்போது அவருக்கு 16 வயது.
இதையடுத்து கல்பனா திருமணம் செய்து கொண்டு, கணவன், மகன்கள் என குடும்ப வாழ்க்கைக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இருப்பினும் அவருக்குக் கல்வி மீதான தாகம் இருந்து கொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் ஒருவர் மூலம் கல்பனாவுக்குக் கல்வியை இடைநிற்றல் செய்தவர்களுக்காக அரசு நடத்தும் இரவு பள்ளி குறித்துத் தெரியவருகிறது. மேலும் முழுக்க முழுக்க இலவசம் என்பதால் பாதியில் விட்ட தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, 2021ம் ஆண்டு முதல் கணவன் மற்றும் மகனுக்குத் தெரியாமல் இரவு பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றுவந்துள்ளார். மேலும் நடைப்பயிற்சி சென்று வருவதாகக் கூறி தினமும் கணவரை ஏமாற்றி விட்டு பாடம் கற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அயர்லாந்தில் இருக்கும் அவரது மகனுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரது மகன் இந்தியா வந்துள்ளார். அப்போதுதான் அவருக்குத் தனது தாய் இரவு பள்ளியில் சேர்ந்து படித்து வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து தாயின் விருப்ப படியே அவரை தேர்வு எழுதவும் அனுமதித்துள்ளார்.
இதையடுத்து 53 வயதில் கல்பனா 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி அதில் 79.60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் பள்ளி கனவு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தனது தாயின் அசாத்திய நம்பிக்கை கனவு குறித்து அவரது மகன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்து, பலருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். தற்போது கல்பனா குடும்ப நெருக்கடியால் கல்வியை கைவிட்டவர்களுக்கு மத்தியில் ஒரு முன் உதாரணமாக உருவெடுத்துள்ளார்.