மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரையடுத்து கபர்கெடா என்ற பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம்.-ல் இருந்து ஒருவர் ரூ.500 எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அவருக்கு ஐந்து ரூ.500 (ரூ.2,500) நோட்டுகள் வந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் ரூ.500 எடுக்க முயன்றபோது, மீண்டும் ரூ.2,500 வந்தது. இந்த செய்தி வேகமாக பரவி ஏ.டி.எம் வாசலில் மக்கள் குவிந்தனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஒருவர் வங்கி கிளைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதோடு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம்மை ஆய்வு செய்து உடனடியாக ஏ.டி.எம் மையத்தை மூடினர்.
பின்னர் இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், ஏ.டி.எம்.-ல் ரூ.100 வைக்கக்கூடிய தட்டில் மாறுதலாக ரூ.500 வைக்கப்பட்டதால் இந்த குளறுபடி நடந்துள்ளதாக கூறினர். மேலும் இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இது போன்ற சம்பவம் அங்கு தற்போது இரண்டாவது முறை நடந்துள்ளதால், இந்த செய்தி அப்பகுதி மட்டுமின்றி நாடுமுழுவதும் வைரலாகி வருகிறது.