மத்திய பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்திற்குட்பட்ட மைஹார் மலையில் சாரதா தேவி கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் செல்லும் வசதிக்காக ரோப்கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 7 ரோப்கார்களில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென காற்று பலமாக வீசியதால் மின்சாரம் விநியோகம் திடீரென தடைப்பட்டுபோனது. இதனால் பாதிவழியிலேயே ரோப்கார் நின்றது. பின்னர், அரைமணி நேரத்திற்கு மேல் காற்று வேகமாக வீசியதால் 7 ரோப்கார்களும் ஆடிக்கொண்டே இருந்தனர்.
இதனால், அதில் இருந்தவர்கள் பதறியடித்து கூச்சலிட்டுள்ளனர். மேலும் எப்போது வேண்டுமானாலும் ரோப்கார் அறுந்து கீழே விழுந்து விடுமோ என்ற அச்சம் அங்கிருந்த எல்லோருக்கும் இருந்துள்ளது. ஆனால், எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. காற்று நின்றபிறகு மீண்டும் ரோப்கார்கள் இயக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ரோப்கார்களை இயக்க கூடாது என வானிலை துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ரோப்கார் நிர்வாகம் தனது சேவையை நிறுத்தாமல் அலட்சியத்துடன் செயல்பட்டதாலே இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.