அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவினைக் கண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலால், உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதுமட்டுமின்றி முதலீகளை பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து, மற்ற பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மாதத்தில் 77 ஆக சரிவடைந்தது.
இதன் காரண்ஞமாக மத்திய பா.ஜ.க அரசை அனைத்து எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய ரூபாயின் இந்த சரிவு கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத ஒன்று என காங்கிரஸ் கூறியிருந்தது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, “மோடி ஜீ இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது நீங்கள் மன்மோகன் ஜீயை விமர்சித்தீர்கள். தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு, ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கிறது. ஆனால், கண்மூடித்தனமாக நான் உங்களை விமர்சிக்க மாட்டேன். நமது பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துங்கள், ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அல்ல” எனப் பதிவிட்டிருக்கிறார்.