இந்தியா

ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவரத் துடிக்கும் மோடி அரசு: பதறவைக்கும் திட்டம்!

பா.ஜ.க வென்றால் தேர்தலே இருக்காது என்று தேர்தலுக்கு முன் எழுந்த குரல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ அந்த முழங்கங்களின் துவக்கப் புள்ளியாக அமைகிறது.

ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவரத் துடிக்கும் மோடி அரசு: பதறவைக்கும் திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒரு நாட்டின் பிரதமர் சீர்திருத்தங்களை செய்வேன் என்று கூறி மக்களிடம் ஆதரவை ஏமாற்றி பெறுகிறார். பிறகு க்ரீன் புக் என்ற அதிகாரத்துக்கான கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார். அது கிட்டத்தட்ட ஒரே தேர்தல் முறையை ஒத்த ஒரு செயல். அது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக மாறி, சர்வாதிகாரியாக உருவெடுக்கிறார் லிபியாவில் பிரதமராக சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாஃபி.

தேர்தல் முறைகளுக்கு இன்னொரு உதாரணமும் நம் கண்முன்னே உள்ளது. அதிபர் ஆட்சி மூலம் ஒற்றைத் தலைமையிலான ஆட்சியை திணிக்கும் நாடுகள் பல உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், பிரேசில், நைஜீரியா போன்ற பல நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

அதில் தற்போது உள்ள அதிபர்கள் மட்டுமே மீண்டும் வெற்றி பெறுவார்கள் என்ற முடிவோடுதான் தேர்தலே நடத்தப்படுகிறது. அவர்கள் சொல்வதுதான் அங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் சட்டமாக உள்ளது. இந்த நாடுகளும் சர்வாதிகாரத்தைத்தான் மக்களிடத்தில் திணித்துள்ளன. இந்த உதாரணங்களோடு ஒத்துப்போகும் ஒரே நாடு.. ஒரே தேர்தல் என்று முழங்களை கடந்த 2019 ஆண்டு வெளிப்படையாகவே முன்வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கங்கள் முன்வைக்கப்படுகிறது.

Modi one nation one election
Modi one nation one election

அதுவும் நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அவற்றை முன்வைத்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா பேட்டி ஒன்றை வழங்கினார். அதில்தான், “எதிர்காலத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கையை கொண்டுவருவது நல்ல யோசனைதான், ஆனால், இந்த மாற்றத்திற்கு கால அவகாசம் தேவைப்படும், அதை அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துமாறு கோரப்பட்டால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யத் தயாராக உள்ளது. அதற்கான திறனுடையதாகவும் தேர்தல் ஆணையம் உள்ளது. அனைத்து தேர்தல்களையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த ஆணையம் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு பல கண்டனங்கள் எழுந்திருக்கும் வேளையில் அடிப்படையில் சில கேள்விகளும் முன் வைக்கப்படுகிறது.

அதாவது.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்த நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் இந்தியாவுக்கு பல ஆபத்துகள் எழும் அபாயம் உள்ளது.

130 கோடி மக்கள் உள்ள தேசத்தில் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து வாக்குச்சாவடியிலும் துணை ராணுவப்படையினரை நியமிக்கும் அளவுக்கு போதிய பாதுகாப்பு வீரர்கள் நம்மிடம் உள்ளனரா என்ற கேள்வியை முதலில் எழுப்பவேண்டிய தேவை உள்ளது.

அதேபோல், இன்னும் சில கேள்விகளும் எழும். குறிப்பாக, மாநில அரசு மீதோ , ஒன்றிய அரசு மீதோ நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வந்தால் அதன் நிலை என்னவாகும்?

ஏற்கெனவே மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் நிலைதான் நீடிக்கிறது. இதில் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒருசேர நடத்துவது மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் விதமாக அமையாதா?

கட்சித்தாவல் சட்டம் நீர்த்துப் போய் குதிரை பேரங்கள் வலுக்கும் அபாயம் நீடிக்கும் என்பது போன்ற அதிர்ச்சிகளுக்கும் வாய்ப்பிருக்கிறது.

ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவரத் துடிக்கும் மோடி அரசு: பதறவைக்கும் திட்டம்!

ஒருவேளை ஒரு மாநில சட்டமன்றம் கலைந்தால் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடக்குமா? இடைத்தேர்தலாக நடக்கும் என்றால் மீண்டும் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய ஆகும் செலவு தற்போதுள்ள நடைமுறையைவிட அதிகமாகத்தானே அமையும்.

மாநில அரசைக் கவிழ்த்து ஆளுநர் ஆட்சியையும், ஒன்றிய அரசைக் கவிழ்த்து குடியரசு தலைவர் ஆட்சியையும் அமைத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபர்களால் ஆட்சி நடத்துவது எந்த விதத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

“ஒரே நாடு... ஒரே தேர்தல்” முழக்கம் தேசியக் கட்சிகளே மாநிலங்களில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடா... மாநிலக்கட்சிகள் மாநில உரிமைகளை கையிலெடுத்து போராடும் விஷயங்களில் பணிந்து போக வேண்டிய சூழல் உள்ளதால் மாநிலக் கட்சிகளை அழித்து ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தும் எண்ணமா என்ற கேள்விகள் தானாகவே எழுகிறது.

இந்த நடவடிக்கையெல்லாம் ஒற்றை அதிகாரமான அதிபராட்சிக்கு வழிவகுக்கும் என்ற விஷயமே அனைவரது விமர்சனமாகவும் எழுந்துள்ள நிலையில் இந்தியாவில் அதிபராட்சியை விரும்புகிறதா பா.ஜ.க அரசு என்ற கேள்வியும் தானாகவே எழுகிறது.

வெளிநாடுகளில் எல்லாம் அதிபர் பதவி பிரதமரை விட செல்வாக்கு மிகுந்ததாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களின் படிப்பினையாக இந்தியாவிலும் செல்வாக்கு மிகுந்த அதிபர் பதவியை அடையவேண்டும் என்று நினைக்கிறாரா மோடி என்ற விவாதங்கள் தற்போது எழத்துவங்கிவிட்டன.

ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவரத் துடிக்கும் மோடி அரசு: பதறவைக்கும் திட்டம்!

ஒரே மதம், ஒரே உணவு, ஒரே வரி, ஒரே மொழி என்ற திணிப்புகளின் நீட்சியாக ஒரே தேர்தலை முன்னிறுத்துகிறது பா.ஜ.க. இந்தியாவே பா.ஜ.க-வுக்கு வாக்களித்தபோது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் பா.ஜ.க-வை முழுமையாகப் புறக்கணித்தன.

இப்படி மற்ற விஷயங்களில் அல்ல. தேர்தலிலேயே மாற்றுக்கருத்து கொண்ட மாநிலங்களில் இந்த கொள்கை எதிர்க்கப்படுகிறது. இதனை பெரும்பான்மை உறுப்பினர்களை வைத்து சாதித்தால் பன்முக கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் எழுச்சி உருவாகும் என்பது கூடவா பா.ஜ.க-வுக்கு தெரியாது?

மாநிலக் கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல்லை விரும்பவில்லை. ஆனால், பா.ஜ.க இதனை வேகமாக நடைமுறைப்படுத்த நினைக்கிறது. பா.ஜ.க வென்றால் தேர்தலே இருக்காது என்று தேர்தலுக்கு முன் எழுந்த குரல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஒரே நாடு... ஒரே தேர்தல் அந்த முழங்கங்களின் துவக்கப் புள்ளியாக அமைகிறது.

சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு தேவைதானா என்றால் இல்லை என்பதே பெரும்பான்மை மக்களின் பதிலாக உள்ளது.

Related Stories

Related Stories