கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி உள்ளதாக கூறியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில், ‘கல்வானில் நமது மூவர்ணக் கொடி சிறப்பாக ஒளிர்கிறது. அங்கு சீனாவுக்கு பதிலடி கொடுக்கவேண்டும். மோடி ஜி, உங்கள் மவுனத்தை கலையுங்கள்’ என குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, அருணாச்சலப் பிரதேசத்தில் 15 இடங்களுக்கு சீன அரசு மறுபெயர் சூட்டியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசை சாடியிருந்தார்.
இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘ஒரு சில நாட்களுக்கு முன்புதான் 1971-ம் ஆண்டு போரில் பெற்ற சிறப்பான வெற்றியை கொண்டாடினோம். நாட்டின் பாதுகாப்புக்கும், வெற்றிக்கும் சிறந்த ஞானமும், உறுதியான முடிவுகளும் தேவை. வெறும் வார்த்தைகள் வெற்றி பெற்றுத்தராது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.