இந்தியா

விவசாயிகளின் முதுகில் குத்திய மோடி அரசு - “திரும்ப கொண்டு வருவோம்” : அமைச்சரின் பேச்சால் கடும் அதிர்ச்சி!

வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்கிற தொனியில் வேளாண் அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் முதுகில் குத்திய மோடி அரசு - “திரும்ப கொண்டு வருவோம்” : அமைச்சரின் பேச்சால் கடும் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மோடி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்கிற தொனியில் வேளாண் அமைச்சர் பேசியிருப்பது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாகச் சென்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய இந்த போராட்டம் ஓராண்டாக நீடித்தது.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் விவசாயிகள் டெல்லியின் திக்ரி, சிங்கு எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர்.

ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் முடிவை எடுத்தது.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தனியார் முதலீட்டு மாநாட்டில் பேசிய ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “வேளாண் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை.

ஆனால், இதைக் கண்டு அரசு ஏமாற்றமடையவில்லை. இப்போது ஒரு படிதான் பின்வாங்கியுள்ளோம். கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்” என நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேர்தலுக்காகவே வேளாண் சட்டங்களை பா.ஜ.க அரசு வாபஸ் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், பா.ஜ.க அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories