மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பதன் மூலம் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பலம் மிக்க ஆட்சியாக தி.மு.க உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க 6வது முறையாக ஆட்சி அமைத்து, பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு என ஆட்சி அமைத்த நான்கு மாதத்திலேயே 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கும் விதத்தில், தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் 24, மாநிலங்களவையில் 7 என ஆக மொத்தம் 31 எம்.பி.கள் இருந்தனர்.
இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர் முகமத்ஜான் மறைவை அடுத்து அந்த இடம் காலியானது. அதேபோல், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதனால் தமிழ்நாட்டில் மாநிலங்களவையில் 3 உறுப்பினர் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் இந்த மூன்று இடங்களுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க சார்பில் எம்.எம். அப்துல்லா போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இவர் கடந்த 3ம் தேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மற்ற இரண்டு இடங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க சார்பில் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோட் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதற்கான அறிவிப்பு 27ம் தேதி வெளியாகிறது.
மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள மூன்று இடங்களில் தி.மு.க உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் தி.மு.கவின் பலம் 34ஆக உயர்கிறது.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை அடுத்த பலம் மிக்க கட்சியாக தி.மு.க உருவெடுத்துள்ளது. பா.ஜ.கவின் மக்கள் விரோத திட்டங்களுக்குத் தொடர்ச்சியாக தி.மு.க விமர்சித்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.