மத்தியப் பிரதேச மாநிலம், மஹித்பூர் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் பழைய பேப்பர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை பழைய பொருட்களை வாங்குவதற்காக லாரியில் அப்துல் ரஷீத் சிக்லி கிராமத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த இந்துத்துவ கும்பல், 'எங்கள் கிராமத்திற்கு எவ்வளவு தைரியமாக வியாபாரம் செய்கிறீர்கள்' என கூறி அவரை தாக்கியுள்ளனர். மேலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடச் சொல்லி அவரை அந்த கும்பல் தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து இதில் தொடர்புடைய கமல் சிங் மற்றும் ஈஸ்வர் சிங் ஆகிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று இஸ்லாமிய வியாபாரிகள் மீது இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இஸ்லாமிய வியாபாரிகள் குறி வைக்கப்படுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து முன்னாள் முதல்வர் கமல்நாத், "இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்காமல் பா.ஜ.க அரசாங்கம் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது" என விமர்சித்துள்ளார்.