நாடுமுழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சகோதரர்களின் கையில் ராக்கி கயிறை கட்டி சகோதரிகள் தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், பீகாரில் பாம்பாட்டி ஒருவர், தன்னுடன் இருக்கும் இரண்டு பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்டி தன் பாசத்தை வெளிப்படுத்த நினைத்துள்ளார்.
இதன்படி, பாம்புகளுக்குக் குங்குமம் வைத்து, ராக்கி கட்ட முயன்றுள்ளார் பாம்பாட்டி. அப்போது ஒரு பாம்பு திடீரென பாம்பாட்டியின் காலில் கடித்துள்ளது. இருப்பினும் பாம்புகளை விடாமல் கையில் பிடித்துக்கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.
பின்னர், அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் பாம்பு வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். மேலும் பாம்பு கடித்தவர்களை குணப்படுத்தியும் வந்துள்ளார்.
பாம்பு கடியிலிருந்து மக்கள் உயிரைக் காப்பாற்றி வந்த இவர், பாம்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “பாம்பிற்கு பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்” என்ற பழமொழி உண்மையாகி இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.