மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தொலைக்காட்சி நடிகை ரூபா பட்டாச்சார்ஜி. இவர் பா.ஜ.கவில் இணைந்து சட்டமன்றத் தேர்தலின் போது அக்கட்சிக்காகப் பணியாற்றினார்.
இந்நிலையில், இவர் திடீரென பா.ஜ.கவில் இருந்து விலகுவதாகத் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.க தலைவர்கள் குறித்து தொடர்ந்து அதிருப்திகருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ரூபா பட்டாச்சார்ஜி, நான் அரசியலிலிருந்து விலகுகிறேன். நான் வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. நான் மக்களின் நலனுக்காக நியாயமாக தொடர்ந்து பேசுவேன். மேலும் நான் நடிகையாக மட்டுமல்லாமல் நான் ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன்.
கொரோனா இரண்டாவது அலையின்போது, நிறைய சமூக சேவைப் பணிகளைச் செய்தேன். தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்ததால் நான் கட்சியிலிருந்து விலகவில்லை. பா.ஜ.கவினரால் சந்தித்த அவமானங்களால் கட்சியிலிருந்து விலகுகிறேன்.
பா.ஜ.க பொதுச் செயலாளர் சயந்தன் பாசு என்னை கடுமையாகத் திட்டினார். இதுகுறித்து அவரிடம் காரணம் கேட்டால் சொல்லவில்லை. இது எனக்கு மிகவும் அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் பா.ஜ.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே விலகுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சிபிஎம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரூபா பட்டாச்சார்ஜி கலந்துகொண்டார். இதனால் மேற்குவங்க பா.ஜ.க தலைமை இவர் மீது அதிருப்தியில் இருந்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இவர் கட்சியிலிருந்து விலகியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.