உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிடக் கோரி இஸ்லாமியர் தாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், வலதுசாரிகள் சிலர் கும்பலாகச் சேர்த்து இஸ்லாமிய இளைஞரை கொடூரமாகத் தாக்கி இழுத்துச் செல்கிறார்கள். அப்போது அவர்களிடம் சிறுமி ஒருவர் தனது தந்தையை அடிக்கவேண்டாம் எனக் கதறி அழுகிறார். அப்போதும் காவித்துண்டு அணிந்திருந்த அந்த கும்பல் விடாமல் அவரை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
பின்னர், இதுபற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார், இஸ்லாமிய இளைஞரை அந்த கும்பலிடமிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியான அப்சார் அஹமது என தெரியவந்தது. மேலும் அந்தச் சிறுமி அவரது குழந்தை என்றும் தெரியவந்தது.
இதையடுத்து அப்சார் அஹமது கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இஸ்லாமிய வாலிபர் மீதான தாக்குதலுக்குக் காரணமாக இருந்த அஜய், ராகுல் குமார், அமர் குப்தா ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகமாகவே இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பா.ஜ.கவினர் போராட்டத்தில் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.