இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பத்தரிகையாளர்கள் என பலரின் மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்களைச் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உண்மையைச் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால், இது குறித்து எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காமலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும் ஒன்றிய அரசு இருந்து வருகிறது.
இந்நிலையில், பெகாசஸ் குறித்து பேசாமல் மோடி அரசு எத்தனை நாட்களுக்கு ஒளிந்து, மறைந்து தப்பிக்க முடியும் என முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பெகசிஸ் உளவு மென்பொருள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது பல நாடுகளை உலுக்கியுள்ளது. பிரான்ஸ் நாடு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இரண்டு பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன என்று பிரான்ஸ் நாட்டின் சம்பந்தப்பட்ட துறை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் முறையீட்டைத் தொடர்ந்து அந்த நாட்டைச் சமாதானப்படுத்துவதற்காக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டுக்கு விரைந்துள்ளார். உளவு மென்பொருளை உருவாக்கிய NSO குழுமத்தின் அலுவலகங்களில் இஸ்ரேல் அரசு சோதனை செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இவ்வளவுக்கும் பிறகு எந்த உளவு வேலையும் நடக்கவில்லை என்று மோடி அரசு சாதிக்கிறது. நாடாளுமன்றத்தில் திறந்த விவாதம் வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் நியாயமான கோரிக்கையை மோடி அரசு முரட்டுத்தனமாக நிராகரிப்பது ஏன்? மோடி அரசின் பிடிவாதமும் நிராகரிப்பும் நமது சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எத்தனை நாட்களுக்கு மோடி அரசு ஒளிந்து மறைந்து தப்பிக்க முடியும்?” எனத் தெரிவித்துள்ளார்.