உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இஸ்லாமிய முதியவர் அப்துல் சதாம். இவர் லோனி நகரில் தொழுகை செய்வதற்காக மசூதக்கு நடந்து சென்றபோது, ஒரு கும்பல் அவரை வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளது.
மேலும், இஸ்லாமிய முதியவரைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, 'ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் 'வந்தே மாதரம்' என கூறச் சொல்லி வற்புறுத்தி அவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும் அவரது தாடியை வெட்டியதோடு, இஸ்லாமியர்களைத் தாக்கும் வீடியோவை காண்பித்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து யாரோ ஒருவர் இணையத்தில் வெளியிட, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக காசியாபாத் போலிஸார் வழக்குப் பதிவு செய்து பிரவேஷ் குஜ்ஜார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மற்றவர்களை போலிஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஜூன் 5ஆம் தேதி நடந்தது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாக்குதலுக்குள்ளான இஸ்லாமிய முதியவர் கூறுகையில், "நான் மசூதிக்கு சென்றபோது, ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர் எனக்கு லிஃப்ட் கொடுத்தார். அப்போது அந்த ஆட்டோவில் இரண்டு பேர் ஏறினர். பின்னர் அவர்கள் என்னை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து என்னைத் தாக்கினர். அப்போது, அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் வந்தே மாதரம் எனக் கூறுமாறு வற்புறுத்தி என்னை தாக்கினார்கள். அவர்கள் என் தொலைபேசியைப் பறித்துக்கொண்டு என் கைக்கடிகாரத்தை உடைத்தார்கள்.
பின்னர், அந்த கும்பல் கத்தரிக்கோலால் என் தாடியை வெட்டி எடுத்தார்கள். இஸ்லாமியர்களைத் தாக்கும் வீடியோவைக் காட்டி என்னைக் கொலை செய்வதாகவும் மிரட்டினர்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற கும்பல் தாக்குதல் அதிகமாக நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.