இந்தியா

"வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்வதே விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு" : மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை!

புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்சனையின் தீர்வுக்கு முதல் படி என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

"வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்வதே விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு" : மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசு கொண்டுவந்த விவசாய விரோத புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையிலும் கடந்த ஆறு மாதமாகப் போராடி வருகிறார்கள்.

கொரோனாவால் விவசாயிகள் போராட்டத்தையே மறந்துவிட்ட மத்திய அரசுக்கு நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் வகையிலும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டியும் மே 26ம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து விவசாயிகள் திட்டமிட்டபடி இன்று டெல்லி எல்லைப்பகுதியான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் போராடி வரும் விவசாயிகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி, நரேந்திர மோடியின் உருவபொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், அரியானா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே விவசாயிகள் போராட்ட பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் இன்று 6 மாதங்கள் நிறைவு. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிப் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய பொல்லாத சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?

அரசு வினை விதைத்தது. வினை தானே விளையும்? மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி" என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories