பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல ஹாலிவுட் நட்சத்திரமும் பாடகியுமான ரிஹான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பிரபலங்களும் விவசாயிகள் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் 2 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், உலகளவில் பிரபலமானவர்களின் கருத்துகளால் இந்த விவகாரம் தற்போது உலகளவிலான பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு வரும் பிரபலங்களுக்கு எதிராக பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வலதுசாரி ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத், தனது ட்வீட்டில், “அவர்கள் விவசாயிகள் அல்ல; இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் தீவிரவாதிகள். அவர்கள் அமெரிக்காவைப் போல இந்தியாவைப் பிரித்து, சீனாவின் ஆதிக்கத்தை ஓங்கச்செய்ய முயல்கின்றனர். நாங்கள் உங்களைப் போல் எங்கள் நாட்டை விற்பனை செய்வதில்லை. இதுகுறித்து நீங்கள் பேசவேண்டாம். அமைதியாக இருங்கள் முட்டாள்களே” எனக் கடுமையாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும், இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமை நிலைக்கட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2 மாதங்களுக்கும் மேலாக தலைநகரில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இதுவரை குரல் கொடுக்காத சச்சின், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாட்டவர்களை நோக்கி எதிர்க்குரல் எழுப்பியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.