பா.ஜ.க அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அழித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பா.ஜ.க அரசு. இந்த வரிசையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்.ஐ.சி நிறுவன பங்குகளில், 25 சதவீதம் வரையிலான பங்குகளை விற்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக எல்.ஐ.சி சட்டத்தில் திருத்தம் செய்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமான பி.பி.சி.எல் நிறுவனத்தில் (பாரத் பெட்ரோலியம்) மத்திய அரசுக்கு இருக்கும் 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது.
பா.ஜ.க அரசின் இத்தகைய திட்டங்களை காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “இந்த நாடு மோடி அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இதில் தேவையில்லாத இந்த தனியார்மயமாக்கலும் ஒன்று.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், மோடி அரசு வேலைவாய்ப்பை அழித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.
இந்தத் தனியார் மயமாக்கலால் யார் பயன்பெறுவது? மோடிக்கு நெருக்கமாக இருக்கும் சில நண்பர்கள் மட்டுமே இதனால் பயனடைவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மோடி ‘அரசு நிறுவனத்தை விற்க’பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். நாட்டின் சொத்துகள் பா.ஜ.க அரசின் சொந்த பொருளாதார நலனை ஈடுசெய்ய சிறிது சிறிதாக விற்கப்படுகின்றன. எல்.ஐ.சி விற்பனையானது மோடி அரசாங்கத்தின் மற்றொரு வெட்கக்கேடான முயற்சி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.