கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் பல குடும்பங்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ளன.
ஊரடங்கு காலத்தில் மட்டுமே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட தளங்களால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.
மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தாலும், சீன செயலிகளை தடை செய்யும் மத்திய அரசு, இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது.
இந்நிலையில், இளைஞர்களைப் பாதுகாக்க ரம்மி மற்றும் போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் கூடிய மாநில அமைச்சரவை ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா பேசுகையில், “ஆந்திர மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் நடக்கும் சூதாட்டம், ரம்மி, போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க மாநில அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதற்காக 1976 ஆந்திர விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் அனுமதியளிக்கப்பட்டது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆன்லைன் விளையாட்டுகளை அரசின் உத்தரவுகளை மீறி நடத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் போட்டியாளர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
இரண்டாவது முறையாக அதே தவறைச் செய்தால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோர் பிடிபட்டால் அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஆந்திர மாநில அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.