மத்திய அரசு ஊழியர்கள் 50 - 55 வயதைக் கடந்தாலோ அல்லது 30 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தாலோ அவர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கையில், “50 - 55 வயதைக் கடந்த அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பொதுநலன் கருதி பணி ஒய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அதேபோல, 50-55 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்கள் ஏற்கெனவே தகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பணியில் தொடரலாம் என சான்று அளிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கும் இந்த புதிய விதியில்இருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது. அவர்களும் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் தகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
தகுதி ஆய்வின்படி, ஊழியர்களின் தகுதி குறைந்திருந்தது தெரியவந்தால் அவர்களுக்கும் பணி ஓய்வு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கான முன்னேற்பாடாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதிக ஊதியம் பெறும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெறச் செய்வதன் மூலம் ஊதிய தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, தனியாருக்கு அரசு உதவுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.