இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917-லிருந்து 27,892-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 826-லிருந்து 872-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914-லிருந்து 6,185-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 44 சதவிகித தொற்று டெல்லி, அஹமதாபாத், இந்தூர், மும்பை, ஜெய்ப்பூர், ஹைதராபாத் ஆகிய 6 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.
இதில் பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 62.4% தொற்று அஹமதாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதேப்போல் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் 54.6% தொற்று இந்தூரில் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு காலத்தை ஜனவரி 30 முதல் மார்ச் 24; மார்ச் 25 முதல் ஏப்ரல் 10; மற்றும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 24; என மூன்று கட்டமாகப் பிரித்து பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள், மோடி அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது.
இந்த விபரங்களின்படி, முதலாவது கட்டத்தில் 19 சதவீத பாதிப்பைப் பெற்றிருந்த கேரளா, படிப்படியாக தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக இரண்டாவது கட்டத்தில் 4 சதவீதமாக பாதிப்பு மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்து, மூன்றாவது கட்டத்தில் வெறும் 1 சதவீதம் என்ற நிலையை எட்டியிட்டிருக்கிறது.
ஆனால், முதல் கட்டத்தில் 6 சதவீதமாக இருந்த குஜராத் தற்போது 14 சத வீதமும், முதல் கட்டத்தில் வெறும் 2 சதவீதமாக இருந்த மத்தியப் பிரதேசம் தற்போது 8 சதவீதம் என்ற நிலையை எட்டியிருக்கின்றன. அதேப்போல், மரண விகிதத்திலும் பா.ஜ.க ஆளும் குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் கடுமையான பாதிப்பையே சந்தித்துள்ளன.
குறிப்பாக குஜராத் 7 சதவீதம் என்ற நிலையிலிருந்து 19 சதவீதம் என்ற நிலைக்கு சென்றுள்ளது. பா.ஜ.க பதவி வெறியோடு காங்கிரசிடமிருந்த ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றிய மத்திய பிரதேசம் தற்போது மிக முக்கியமான ஹாட்ஸ்பாட்டாக மாறியிருப்பதும், மத்திய மோடி அரசும் பா.ஜ.க எந்த அளவிற்கு அலட்சியத்தின் உச்சத்தில் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் வைரஸுக்கு மதச்சாயம் பூசும் நடவடிக்கைகளை தடுப்பதிலும் கேரளா முழு கவனத்தை செலுத்தியது. இதன் விளைவு தெளிவாக தெரிகிறது.
ஆனால் குஜராத் போன்ற மாநிலத்தில்? 1995 முதல் பா.ஜ.க ஆட்சி செய்கிறது. மதப்பிளவை உருவாக்கியதில் காட்டப்பட்ட முனைப்பு இன்று கோவிட் வைரசை கட்டுப்படுத்துவதில் காட்டப்படவில்லை. இதன் விளைவுகள் இன்று குஜராத் திணறுவதில் வெளிப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேப்போல் மத்திய பிரதேசம் தொடர்பாக வெளியிட்ட பதிவில், “மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டிருப்பது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல், எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதிலேயே கவனம் செலுத்திய பா.ஜ.கவின் உயர்மட்டத் தலைமை தான், மத்தியப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்குப் பொறுப்பாகும்.
அதிகாரத்தின் மீதான அவர்களின் இச்சை, மாநிலத்தில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற் கான முயற்சிகளை ஆபத்திற்குள்ளாக்கி இருக்கிறது,” என்று யெச்சூரி குற்றம்சாட்டியிருக்கிறார்.