பட்டியலினத்தவர், பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறைகளைத் தடுக்கும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை கூட கூட்டவில்லை என்று மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று (மார்ச் 17) மக்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் மறுவாழ்வுத் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா அளித்த பதிலை ஒட்டி, தி.மு.க எம்.பி கனிமொழி துணைக் கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் கனிமொழி எம்.பி பேசுகையில், “பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்காக மாநில அளவில் முதலமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு பல மாநிலங்களில் கூட்டப்படவில்லை என்பது வேதனைகரமானது.
தமிழ்நாடு சமூக நீதிக்கான பெருமை மிக்க மாநிலம். அப்படிப்பட்ட தமிழகத்தின் முதல்வர் இந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை இதுவரை ஒரு முறை கூட கூட்டவில்லை என்பது வெட்கக் கேடானது.
மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து 4 முறை அறிவுறுத்தப்பட்டும் கூட முதல்வர் அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மாநில முதல்வர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் மறுவாழ்வுத் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, “கனிமொழி குறிப்பிட்டதுபோல, மாநில முதல்வர்கள் அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் கூட்டப்படவில்லை.
ஆனால் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அடுத்து வரும் காலங்களில் மாவட்ட அளவுக்குக் கீழே உள்ள நிலைகளிலும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.