மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை மட்டும் வெளியேற்ற கொண்டுவரப்பட்டதாகக் கூறி இஸ்லாமியர்களை வெளியேற்ற முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் மோடி அரசின் குடியுரிமை சட்டத்தை கேரளா, மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் எனக் கூறி வரும் நிலையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
அப்படி பெங்களூருவின் வடக்கு பகுதியில் உள்ள அக்ரஹாரா பகுதியில் ஏராளமானோர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியதாகவும் அப்பகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ அர்விந்த் லிம்பாவள்ளி குற்றம்சாட்டி வந்தார்.
இதனையடுத்து அவரது புகாரை முறையாக விசாரிக்காமல், வடக்கு பெங்களூரு பகுதியில் உள்ளவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று அக்ரஹாரா பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது அரசு. மேலும் அங்கிருந்தவர்களை கர்நாடகாவை விட்டு வெளியேறும்படியும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அக்ரஹாரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “எங்கள் மத அடையாளங்களை வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று விரட்டுகிறார்கள். நங்கள் இந்தியர்கள். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
மேலும் வீடுகளை இடிப்பது தொடர்பான எந்த அறிவிப்பையும் முன்பே வெளியிடவில்லை. எங்களுக்கு வாழ ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.வேலைக்காக இங்கு வந்துள்ளோம். ” எனத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எல்லோரும் அஸ்ஸாமில் இருந்து வந்த இந்தியர்கள் என்பதற்கு ஆதாரமாக அஸ்ஸாம் என்.ஆர்.சி பட்டியலில் அவர்கள் பெயரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.