மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆண்டு நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தற்போது நிறைவேற்றியுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று இரவு நிறைவேறியது.
இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மேலும் அமுல்படுத்தப்பட்ட இந்த மசோதாவை திரும்பப் பெறவலியுறுத்தி நாடுமுழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த மசோதாவிற்கு நாட்டு மக்களிடயே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அமெரிக்காவும் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) வெளியிட்டுள்ளது.
அதில், இந்திய அரசாங்காத்தால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாகவும், இதனை திரும்ப பெறும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் மேற்கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டம் புலம்பெயர்ந்தோருக்கான மத ரீதியிலான குடியுரிமைக்கான பாதையை வகுக்கிறது. குறிப்பாக இந்த சட்டத்தில் முஸ்லீம்களை விலக்கி, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க சட்டப்பூர்வமான வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினால் இந்தியா தவறான திருப்பத்தில் ஆபத்தான திசைக்கு திரும்புகிறது . இதன் மூலம் மதச்சார்பற்ற, பன்மைத்துவத்தின் உயர்ந்த வரலாற்று பாரம்பரியம் மற்றும் இந்திய அரசியலமைப்பை எதிர்த்து இயங்குகிறது. மேலும் இது அனைவருக்கும் சமத்துவத்தை அளிக்கும் உத்திரவாதத்தை பொய்யாக்குகிறது.”எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “அரசியலமைப்புக்கு எதிராக மத உள்நோக்கத்துடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்திருக்கும்பட்சத்தில் அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு அமெரிக்கா தடைவிதிக்க வேண்டும்” எனவும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.