முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ளார் காங். தலைவர் ராகுல் காந்தி.
ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சி.பி.ஐ கைது செய்தது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ப.சிதம்பரம். பின்னர், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜாமின் வழங்கினர்.
ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால் ப.சிதம்பரத்தால் வெளியே வர முடியவில்லை. இவரது உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி ஜாமின் கோரப்பட்டது. ஆனாலும் ஜாமின் வழங்கமுடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து வந்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார் ப.சிதம்பரம். ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 106 நாட்களுக்குப் பிறகு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வர உள்ளார். இந்நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பழிவாங்கும் செயல், அவரைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காகச் செய்த செயல்.
சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். நியாயமான விசாரணையின் மூலம் ப.சிதம்பரம் தன்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.