கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்திற்கு ஆறுதலாகப் பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை, நாளை (அக்டோபர் 10) முதல் குறையத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. நான்கு மாதங்களாக நீடித்த தென்மேற்குப் பருவமழை தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் நல்ல மழைப் பொழிவைக் கொடுத்தது. பல மாவட்டங்களில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்தது.
இந்நிலையில், நாளை முதல் தென்மேற்குப் பருவ மழை விடைபெறத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்குப் பருவமழை இன்னும் இரண்டு வாரங்களில் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது, “வட மாநிலங்களில் இருந்து பருவக்காற்றின் வேகம் படிப்படியாக குறையும். ஒரு வாரத்துக்குள் தென் மாநிலங்களில் மேற்கில் இருந்து வீசும் காற்று குறைந்துவிடும்.
இதையடுத்து, வரும் அக்டோபர் 20ம் தேதிக்குள் வடகிழக்குப் பருவக் காற்று துவங்கும். இன்றைய வானிலையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பல பகுதிகளில் வெயிலுடன் கூடிய வறண்ட வானிலையே காணப்படும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற இடங்களில் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.