ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராகவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் 21ம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், 15 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
விசாரணை முடிவடைந்ததை அடுத்து, செப்.,19ம் தேதி வரை ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நாளை தாக்கல் செய்யவுள்ளது.