ரயில்வேயில் இன்னும் மனிதக் கழிவுகளை மனிதனே கைகளால் அள்ளும் அவலம் நிகழும் நிலையில், நமக்கு புல்லட் ரயில்கள் முக்கியமில்லை என தி.மு.க எம்.பி., கனிமொழி பேசியுள்ளார்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் பணியின்போது ஏற்படும் இறப்புகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவலில், 1993-ம் ஆண்டு முதல் இதுவரை 620 பேர் இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 88 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 144 மலக்குழி மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் பல சம்பவங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கப்படவில்லை. இப்படியான அவலங்கள் நிகழ்வதைச் சுட்டிக்காட்டி மக்களவையில் கொந்தளித்துள்ளார் கனிமொழி எம்.பி.,
மக்களவையில் இன்று ரயில்வேயின் நிலை குறித்தும் புல்லட் ரயில்கள் குறித்தும் பேசிய தி.மு.க எம்.பி., கனிமொழி, “இரயில்வேயில் இன்னும் பணியாளர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் வெட்கப்பட வேண்டிய இந்த நிலையில் நமக்கு புல்லட் ரயில்கள் கிடைப்பது முக்கியமில்லை.
இரயில்வே துறையில் மனித மலத்தை அள்ளும் வேலையை ஊழியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டாம் என சொல்லிவிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தி மனித கழிவுகளைக் அள்ளி வருகிறது. இந்த நிகழ்வு இன்னும் தொடர்வது நாட்டிற்கு வெட்கக்கேடானது.” என்றார்.