17வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 6 நாட்களில் நாடெங்கும் உள்ள 6 வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என பலதரப்பட்டவர்கள் மீதும் தங்களது மதவாதத்தைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல்.
இது ஒருபுறமிருக்க, மேற்கு வங்க மாநிலத்தில் முந்தைய தேர்தலில் வெறும் 2 தொகுதிகளை வென்ற பா.ஜ.க தற்போது 18 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. எனவே அந்த மாநிலத்தில் தங்களது கைது சற்று ஓங்கியிருப்பதால், ஆங்காங்கே அரஜாக போக்கில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் உள்ள நைஹாத்தியில் நடந்த பேரணிக்கு சென்ற போது, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் காருக்கு அருகில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என பாஜகவினர் முழக்கமிட்டுள்ளனர்.
இதனால் கடும் கோபமுற்ற மம்தா பானர்ஜி, காரிலிருந்து இறங்கி கோஷமிட்டவர்களை நோக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், அங்கிருந்து ஓட்டம்பிடித்த பா.ஜ.க.,வினர் குறித்த விவரங்களை அனுப்புமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார் மம்தா.
இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “கோஷமிட்டவர்கள் எவரும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. வெளி மாநிலத்தில் இருந்து என்னை துன்புறுத்துவதற்காகவே வந்திருக்கிறார்கள். இதற்கு எப்படி அவர்களுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை” என கொந்தளிப்புடன் பேசியிருக்கிறார். இதற்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இதே மாதிரியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.