ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், பிஜு ஜனதா தளம் 112 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றன. இதர கட்சிகள் 2 தொகுதியை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், ஒடிசாவில் பிஜு ஜனதா தள தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். இதேபோன்று, 21 மக்களவை தொகுதிகளில் பிஜு ஜனதா தளத்துக்கு 12 இடங்கள் கிடைத்தன. பாஜ 9 தொகுதிகளை கைப்பற்றியது.
இதையடுத்து, பிஜூ ஜனதா தளம் கட்சியின் சட்டசபை தலைவராக நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், நவீன் பட்நாயக் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கணேஷி லாலை சந்தித்து, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு அமைக்குமாறு நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, ஒடிசா முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் கணேஷி லால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் நவீன் பட்நாயக்குடன் 11 அமைச்சர்களுக்கும் 9 துணை அமைச்சர்களுக்கும் பதவிஏற்று கொண்டனர்.