இலங்கை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.
இலங்கையில் கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்பட பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இலங்கையில் தற்போதும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இன்னும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு. இவர்களில் 3 பெண்களும் அடக்கம்.
சந்தேக நபர்கள் குறித்த தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துமாறு அரசும், காவல்துறையினரும் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.