நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று (மே 20) 5-ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும், மோடியும் இஸ்லாமியர்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வெறுப்பு பேச்சையும் பேசி வருகின்றனர்.
மேலும் மீதமிருக்கும் தொகுதிகளுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 6-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைவரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு மோடி ஒடிசாவுக்கு இன்று பிரசாரத்துக்காக சென்றார். இவரை அங்கிருந்த பாஜகவினர் வரவேற்க காத்திருந்தனர்.
அப்போது அம்மாநில புரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா (Sambit Patra) மோடியை வரவேற்க தொண்டர்களுடன் காத்திருந்தார். இந்த சூழலில் இவர் பேட்டியளிக்கும்போது மோடி வருகையை குறித்து பூரிப்புடன் பேசினார். அப்போது அந்த கடவுளே மோடியின் பக்தர்தான் என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “பிரதமர் மோடியை காண இங்கு லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளோம். கடவுள் ஜெகநாதனே மோடியின் பக்தர். அவரது வருகைக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். என்னால் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஒடிசா மக்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும்.” என்றார்.
இவரது பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஏற்கனவே பாஜக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது கடவுளை விட மோடியே பெரிது என்பது போல் பாஜக வேட்பாளர் பேசியுள்ளது மக்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், “மகாபிரபு ஸ்ரீ ஜகன்னாதர் பிரபஞ்சத்தின் இறைவன். அவரை ஒரு மனிதனின் பக்தன் என்று அழைப்பது கடவுளை அவமதிக்கும் செயலாகும். இது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஜகன்னாத பக்தர்கள் மற்றும் ஒடியா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இழிவுபடுத்தும் வகையிலான பேச்சு.
ஒடியா அஸ்மிதாவின் மிகப்பெரிய சின்னம் இறைவன். மகாபிரபு ஸ்ரீ ஜகன்னாதரை ஒரு மனிதனின் பக்தன் என்று அழைப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. பாஜக புரி மக்களவை வேட்பாளரின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் மூலம் நீங்கள் ஒடியா அஸ்மிதாவை ஆழமாக காயப்படுத்தியுள்ளீர்கள். இது ஒடிசா மக்களால் நீண்ட காலமாக நினைவுகூரப்பட்டு கண்டிக்கப்படும்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி, "பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவின் பேச்சு கடவுளை அவமதிக்கும் பேச்சாகும். இது கோடிக்கணக்கான பக்தர்கள் மனதை புன்படுத்தியுள்ளது. மோடி பக்தியில் மூழ்கியிருக்கும் சம்பித் பத்ரா, இந்தப் பாவத்தைச் செய்திருக்கக் கூடாது. இந்த கேவலமான கருத்துக்கு நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜக வேட்பாளரின் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடவுளுக்கு மேலானவர்கள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் பாஜகவினர். இது ஆணவத்தின் உச்சம். மோடியை கடவுள் பக்தன் என்று அழைப்பது கடவுளை அவமதிக்கும் செயலாகும்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.