திராவிட இயக்கம், அதன் சிந்தனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தாங்கி ஏராளமான புத்தகங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றை எப்படித் தேர்வு செய்து, எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்பதை அறிவுரைக்கிறது இந்தத் தொடர்...
திராவிட இயக்கத்துக்கு, அதன் சிந்தனைக்கு வலுவூட்டிய புத்தகங்களை இன்றுள்ள தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த, இந்த அரிய வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிற தி.மு.க இளைஞர் அணிக்கு என்னுடைய அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகத்தில் பணக்காரராக வேண்டும் என்று கருதாதவர்கள் யாராவது உண்டா? பணக்காரர்கள் ஆக முடியாதவர்கள் உண்டே தவிர, அந்த ஆசை இல்லாதவர்கள் இல்லை. அதுபோலவே, தான் அறிவாளி ஆக வேண்டும் என்கிற விருப்பம் இல்லாதவர்கள் யாரேனும் இருக்கின்றனரா?
அறிவாளிகள் ஆக முடியாதவர்களாகத்தான் பலர் இருக்கிறோமே தவிர, அறிவாளிகள் ஆக வேண்டும் என்கின்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கிறது. என்ன செய்வது? உழைக்காமல் பணக்காரன் ஆக முடியாது. படிக்காமல் அறிவாளி ஆக முடியாது. இது அடிப்படையான செய்தி.
படிக்க மூன்று காரணங்கள்
அதுவும் திராவிட இயக்கம் போன்ற அறிவார்ந்த இயக்கத்தில் இருக்கிற தி.மு.கழகத்தின் உறுப்பினராக இருக்கிற அத்தனை பேரும் படிக்கிற பழக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும். அதுதான் நமக்கும் பெருமை. நாம் சார்ந்திருக்கும் தி.மு.கழகத்திற்கும் பெருமை. புத்தகங்கள் படிப்பது என்பது ஒரு பழக்கம்.
படிப்பது என்பது தொடக்கத்தில் கொஞ்சம் சிரமமாகக்கூட இருக்கலாம். ஆனால், படிக்காமல் எந்த ஒன்றையும் நாம் சாதிக்க முடியாது, நம் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது, எதிர்க் கருத்தாளர்களுக்கு நம்மால் விடை சொல்ல முடியாது என்கிற இந்த மூன்று காரணங்களை நெஞ்சில் நிறுத்திக்கொண்டால், கண்டிப்பாக இதுவரையில் படித்து வருகிறவர்கள் கூடுதலாகப் படிப்பார்கள். இதுவரையில் படிக்கிற பழக்கம் அவ்வளவாக இல்லை என்கிறவர்கள், இனிமேல் படிப்பார்கள்.
நான்கு வழிகளில் அறிவு
ஒன்றை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும். அறிவு நமக்கு வரவேண்டும் என்றால், அது நான்கு வழிகளில் நம்மை வந்து சேரும். ஒன்று மெய்யறிவு, இன்னொன்று நூலறிவு, மூன்றாவது பட்டறிவு, நான்காவது நுண்ணறிவு. ‘மெய்யறிவு’ என்பது இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் இருக்கிற தனித்தன்மை வாய்ந்தது. நம்முடைய கேள்விகளால், சிந்தனைகளால் நமக்கு வருவது.
அதற்கடுத்தது, ‘நூலறிவு’ என்பது புத்தகங்களைப் படிப்பதால் நாம் பெறுகிற அறிவு. ‘பட்டறிவு’ என்பது பட்டு உணர்வது. அதாவது நம்முடைய அனுபவத்திலிருந்து நாம் பெறுகிற அறிவு, பட்டறிவு. இந்த மூன்று அறிவையும் நுணுக்கமாக அலசி ஆய்ந்து எது சரி, எது தவறு என்று கண்டறிகிற அறிவுதான் நுண்ணறிவு.
இந்த நான்கு அறிவில், மெய்யறிவு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. எல்லோரும் பிறக்கும்போதே அறிவாளிகளாகப் பிறந்து விட முடியாது. அதைப்போல, அனைத்தையும் அனுபவத்தின் மூலம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொன்னால் எல்லோருக்கும் இருக்கிற வாழ்நாள் மிகக் குறைவானது.
அனுபவத்தில் அனைத்தையும் கற்றுக்கொண்டு விட முடியாது. அப்படியானால் நம்முடைய அறிவின் பெரும் பகுதி நாம் படிக்கிற நூல்களில் இருந்துதான் வருகிறது என்பதை முதலில் எண்ணிக்கொள்ள வேண்டும். எனவே படிக்கிற பழக்கம் என்பது நம்மைவிட்டுப் பிரிக்கமுடியாத பழக்கமாக ஆகி விட வேண்டும்.
கண்டு படிப்போம்!
சரி, எதைப் படிப்பது? படிப்பதற்கு எவ்வளவோ நூல்கள் இருக்கின்றன. நாம் வாழ்நாள் எல்லாம் படித்தாலும், புத்தகங்களைப் படித்து முடித்துவிட முடியாது. ஏற்கெனவே அவ்வை சொல்லியிருப்பது போல, ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில’ என்பது தான் உண்மை. எனவே உலகத்தில் இருப்பதையெல்லாம் படிக்கமுடியாது.
சிலர் சொல்வார்கள், `கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம்’ என்று. கண்டதைப் படித்து ஒருவரும் பண்டிதன் ஆக முடியாது. அந்தப் பழமொழிக்கான பொருள், ‘கண்டு அதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம்’ என்பதாகும். எதை நாம் படிக்க வேண்டும் என்று தெரிந்து, அதைக் கண்டறிந்து அதைப் படித்தால் பண்டிதர் ஆகலாம் என்பதுதான் அதன் பொருள்.
இயக்கம் சார்ந்து படிப்போம்
நம்மைப் பொறுத்த அளவில் எந்தத் துறை சார்ந்து முதலில் படிக்க வேண்டும் என்கிற தெளிவை நாம் பெற்றாக வேண்டும். நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறோம். திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக நாம் இருக்கிறோம். அய்யா பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இன்றைக்கு இருக்கிற நம்முடைய தலைவர் தளபதியின் வழியிலே நாம் வந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் திராவிட இயக்கம் சார்ந்த அறிவைப் பெறும் வகையில் முதலில் நூல்களைப் படிக்க வேண்டும்.
அதற்குப் பல்வேறு துறைகள் இருக்கின்றன. இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு எல்லாம் இருக்கின்றன. ஆனால், இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிற நாம், அடிப்படையில் முதலில் நம் இயக்கத்தின் வரலாறு குறித்துப் படிக்க வேண்டும். இரண்டாவதாக நம் இயக்கத்தின் கோட்பாடுகள், சித்தாந்தங்களை நாம் படிக்கத் தொடங்குவோம். சேர்ந்து படிப்போம் வாருங்கள்..!
.... வாசிப்போம்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்