மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதித்திடும் பணியினை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டால் மட்டுமே மத்திய அரசு வழங்குகின்ற நிதி தங்கு தடையின்றி கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு மத்திய அரசு நிதி 2000 கோடி ரூபாயை தமிழகம் இழந்து வருகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட பிரநிதிகளின் கருத்துக்களைக் கேட்காமல் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளுடன் செயல்படுத்தப்படுகிறது.
பேவர் பிளாக் கற்களை அகற்றிவிட்டு 4 இன்ச் கருங்கற்களை பதித்து வருகின்றனர். இக்கற்கள் வெப்பத்தை உள்வாங்கி நடந்து செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதை சுட்டிக்காட்டினால் மேலே மேட் அமைப்போம் எனக் கூறுகிறார்கள்.
இரண்டாவது முறையாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன். பொது கணக்குக் குழு ஆய்வின் போதும் எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்கள் மற்றும் அள்ளப்பட்ட மணல் மாநகராட்சியின் வேறு பணிகளுக்கு பயன்படுத்திட உள்ளதாக கூறுகின்றனர்.
பெரு நிதி முதலீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அந்த நிதி இதற்கு அவசியம் தானா வேறு ஏதேனும் திட்டங்களுக்கு பயன்படுத்திடலாமா என்பது குறித்து ஆய்வு நடத்திட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.