அண்ணா ஓர் ஓவியர் என்பதையும், ஓவியத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்திற்கு எல்லையே இல்லை என்பதையும் அவரது சிறைச்சாலை அனுபவங்கள் தெரிவிக்கின்றன.
இந்தி திணிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1963 நவம்பர் 16ம் தேதி சென்னையில் அரசியல் சாசன எரிப்புப் போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அறிஞர் அண்ணா உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து சென்னை சிறையில் அடைத்தனர்.
கொஞ்சநாட்கள் தனிமைச் சிறையில் அண்ணாவை அடைத்தனர். அண்ணா கைதை கண்டித்து ஏராளமான தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட அவர்களும் கைதாயினர்.
அண்ணா படிக்க அரசியல் புத்தகங்களையும், கழக இதழ்களையும் அளிக்க தடைவிதித்திருந்தது சிறை நிர்வாகம். ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை கூறுவார்கள். வரலாறுகளை பேசுவார்கள்.
அவர் ஓவியர் ஆனது எப்படி என்பது குறித்து தனது சிறைச்சாலை குறிப்புகளில் இவ்வாறு தருகிறார்.
சுந்தரம், ஓவியம் வரைவதற்கான வண்ணங்களைக் கேட்டதற்குத் தரமுடியாது என்று கூறிவிட்ட சிறை அதிகாரிகள், என்ன காரணத்தாலோ, தங்கள் மனதை மாற்றிக்கொண்டு, வண்ணங்களைக் கொடுத்துள்ளனர்.
இப்போது, ஓவியங்கள் தீட்டுவதில் நானும் முனைந்துவிட்டேன். ஒரு ராணுவத் தலைவன், மலைப்பகுதி எனும் இரண்டு ஓவியங்கள் தயாரித்திருக்கிறேன். ராணுவத் தலைவனுடைய தொப்பி சரியாக இல்லையே என்றார்கள் நண்பர்கள்.
"அதெப்படி சரியாக இருக்க முடியும்; இவன் தோற்றுப்போன ராணுவத் தலைவன்; சரண் அடைவதற்காகச் செல்லும் வேளை; எந்தத் தொப்பி கிடைத்ததோ அதை எடுத்துப் போட்டுக்கொண்டு போகிறான்'' என்று காரணம் கூறினேன்! ஐயோ பாவம்! என்று அனுதாபம் தெரிவித்தார்கள்; ராணுவத் தலைவனுக்கா, ஓவியம் போடத் தெரியாத எனக்கா என்று நான் கேட்கவில்லை. கேட்பானேன்!
ஓவியம் வரைவதிலே ஒரு தனி மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நான் வரைந்த "தோற்றுப்போன இராணுவத் தலைவன்' படத்தை அன்பழகன் பார்த்துவிட்டு, "நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள் - இதை வரைந்தது ஏழு வயதுச் சிறுவன் என்று கீழே குறிப்பெழுதினால்'' என்று நகைச்சுவை ததும்பக் கூறினார்.
ஆனால் இன்று அன்பழகனே ஓவியம் வரையத் தொடங்கி விட்டார். திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா! அதனால் அவர் தீட்டத் தொடங்கிய முதல் ஓவியமும், திருவள்ளுவரேதான். ஆக இப்போது மூவர், ஓவியம் தீட்டும் பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கிறோம் - நான், சுந்தரம், அன்பழகன்.
மற்றோர் மலைக்காட்சி வரைந்தேன். . . இது முன்பு வரைந்ததைவிட "தரமாக' இருப்பதாக நண்பர்கள் கூறுகிறார்கள். கூறுகிறார்கள் என்றுதான் கூறமுடிகிறது. . . கருதுகிறார்களா என்று அறிந்து கொள்ள முடியவில்லை. ஓவியம் வரைவதிலே ஓரளவு பயிற்சி இருந்தால், இங்கு திறமையை நேர்த்தியாக்கிக் கொள்ளலாம். எனக்கோ, மாணவப் பருவத்திலேயே ஓவியம் வரையத் திறமை ஏற்பட்டதில்லை. இத்தனைக்கும் என் மாமா, நான் படித்த பச்சையப்பன் பள்ளியில் ஓவிய ஆசிரியர்! ஆனால் திறமை இருக்கிறதோ இல்லையோ, நாமாக ஒரு ஓவியம் வரைந்து அதற்கு வண்ணமிட்டு பார்க்கும்போது களிப்பு எழத்தான் செய்கிறது.
ஓவியம் வரைவதிலே, மற்ற இரு நண்பர்களும் அக்கறை இழந்துவிட்டனர்; நானோ தொடர்ந்து அதிலே விருப்பம் கொள்கிறேன். இரவு வெகுநேரம் வரையில், வண்ணங்களைக் கலப்பதும், எதை எதையோ வரைவதும், மனதுக்குப் புதுவிதமான மகிழ்ச்சி தரத்தான் செய்கிறது.
நண்பர்கள் என்னை மகிழச் செய்வதற்காக, ஓவியம் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்பது எனக்கும் புரிகிறது; கண் இல்லையா காண! ஓவியம் வரையத் தெரியாவிட்டாலும், வண்ணங்களைக் குழைத்து எதையாவது வடிவமெடுக்கச் செய்யும்போது களிப்பு எழுகிறது. ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அந்தக் கலையில் எத்துணை இனிமை காண முடியும் என்பதை உணர இது ஒரு வாய்ப்பு.
மலையும் மடுவும், மாவும் பலாவும், காலை கதிரவனும் மாலை மதியமும், கோட்டை கொத்தளங்களும் கொடி படர்ந்த குடிலும், வாளேந்திய வீரனும் வேல் விழியாளும், பாசம் நிறைந்த பார்வையும் பகை கக்கும் விழிகளும், மழலைமொழிக் குழவியும் பெருமிதமிகு தாயும், இன்னோரன்ன பிற கட்சிகளைத் தமது கை வண்ணத்தால் ஓவியர்கள் உயிர்பெறச் செய்யும்போது, தனித்தன்மை வாய்ந்த ஓர் மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்யும்.
ஓவியக் கலையினர் குறித்து, நான் படித்திருந்த சிறு கதைகள், நெடுங் கதைகள் பலவும் இந்த நேரம் என் நினைவிற்கு வருகின்றன.
இன்றுகூட, உட்அவுஸ் என்பவர் எழுதியுள்ள ஒரு கதைத் தொகுப்பில் ஓவியம்பற்றிய தொடர்புடைய சிறு கதை ஒன்று படித்தேன். ஓவியம் வரைவதிலே விருப்பம் மிகுந்திருந்த வேளை - எனவே, அந்தச் சிறுகதை எனக்கு அதிக அளவு சுவை அளித்தது.
இவ்வாறு ஓவியக்கலை மீது அறிஞர் அண்ணா கொண்டிருந்த ஆர்வமும், அவர் ஓவியர் ஆனதும் நிகழ்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் தனது காஞ்சி இதழில் கார்ட்டூன்களையும், அட்டைப்படங்களையும் வரைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.