தமிழில் வித்தியாசமான கதாகளத்துடன் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கிய முக்கிய இயக்குநர்களில் ஒருவர்தான் இயக்குநர் சுரேஷ் சங்கையா. தனுஷ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2014-ல் வெளியான 'காக்கா முட்டை' திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் இயக்குநராக பணியாற்றியவர்தான் சுரேஷ் சங்கையா.
ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், அதன்பிறகு 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விதார்த், ரவீனா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
புதியதாக திருமணமான நாயகன் விதார்த், தன் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களுடன் ஆட்டுக் கிடாயைப் பலியிட்டுக் குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்த சரக்குந்தில் கிளம்புகின்றனர். பயண வழியில் தாங்கள் செய்யாத விபத்துக் கொலையை தாங்கள் செய்ததாக கருதி, அதனை மறைக்கச் செய்யும் குளறுபடிகள் அதனால் ஏறபடும் விளைவுகளே படத்தின் கதையாகும்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படம் சிறந்த தமிழ் படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு 'சத்திய சோதனை' என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.
நடிகர் பிரேம் ஜி நடிப்பில் கடந்த ஆண்டு (2023) வெளியான 'சத்திய சோதனை' திரைப்படமும், நகைச்சுவை படமாகும். ஒரு கொலையை மையமாக வைத்து பிளாக் காமெடியில் படம் இருந்த நிலையில், இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து, நகைச்சுவை நடிகர் செந்திலை நாயகனாக வைத்து, ஒரு படத்தை இயக்கியதாவும், இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையிலும், படம் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து 'கெணத்த காணோம்' என்ற படத்தை இயக்கினார். இதன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்ததாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியீட்டுக்கு தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுரேஷ் சங்கையாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் இவரது கல்லீரல் பாதிப்படைந்து, சிகிச்சை பலனின்று நேற்று (நவ.15) இரவு சுமார் 11 மணியளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து இயக்குநர் சுரேஷ் சங்கய்யா மறைவுக்கு திரை பிரபலங்கள், திரை ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கய்யாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.