இந்திய திரையுலகில் அண்மைக்காலமாக திரைக்கலைஞர்கள் உயிரிழந்து வருவது குறித்த செய்தி தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது 80, 90-களில் பிரபலமாக விளங்கிய இசையமைப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளது திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் 80, 90-களில் பிரபலமாக திகழ்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் விஜய் ஆனந்த் (Vijay Anand). மறைந்த பிரபல இயக்குநர் விசு இயக்கத்தில் 1984-ல் வெளியான 'நாணயம் இல்லாத நாணயம்' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக விஜய் ஆனந்த் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்தார்.
குறிப்பாக, 'ஊருக்கு உபதேசம்', ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'நான் அடிமை இல்லை', பிரபுவின் 'வெற்றி மேல் வெற்றி', 'சட்டம் ஒரு இருட்டறை' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் நான் அடிமை இல்லை படத்தில் இருந்து "ஒரு ஜீவன்தான்..." பாடல் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பாடலாக அமைத்துள்ளது.
இவர் தமிழ் மட்டுமின்றி கன்னட திரையுலகிலும் 180-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி 2 ஆங்கில ஆல்பம் பாடலுக்கும் இவர் இசையமைத்துள்ளார். இப்படி தொடர்ந்து இசையமைத்து வந்த இவருக்கு, சில ஆண்டுகளுக்கு பிறகு திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த இவர் பெருங்குடல் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், அதற்காக சிகிச்சையும் எடுத்துக்கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் தாம்பரத்தில் உள்ள இந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த ஜனவரி 6ம் தேதி வீடு திரும்பினார்.
தொடர்ந்து வீட்டில் இருந்தே தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை விஜய் ஆனந்த் காலமானார். இவரது உடல் இன்று மாலை 3 மணிக்கு மேலாக பெருங்களத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தனது 71-வது வயதில் மறைந்த விஜய் ஆனந்தின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு திரையுகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.