மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் தான் ஜோஜு ஜார்ஜ் (Joju George). இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் 'தனுஷின் 'ஜகமே தந்திரம்', வைபவ் நடித்த 'பஃபூன்', ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகிறார்.
இந்த சூழலில் இவர் தற்போது 'பனி' என்ற படத்தை இயக்குகிறார். அபயா ஹிரண்மயி, ஆபிரகாம், அபிநயா, சீமா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். இதனால் இவர் தனது படத்திற்கு ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளரான வேணுவை ஒப்பந்தம் செய்துள்ளார்.
தமிழில் வெளியான கமலின் 'குணா', ராஜிவ் மேனனின் 'மின்சார கனவு', எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' உள்ளிட்ட பல படங்களில் வேணு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். எனினும் இவர் மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது 'பனி' படத்திலும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருச்சூரில் நடைபெற்று வந்த நிலையில், ஒளிப்பதிவாளர் வேணு படக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் தவறாகவும், அநாகரிகமாகமாகவும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து இந்த குற்றசாட்டை தொடர்ந்து அண்மையில், இவரது செயலால் படப்பிடிப்பு தளத்தில் வேணுவுக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் அவர் அந்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. தொடர்ந்து தனக்கு சிலரிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் ஒளிப்பதிவாளர் வேணு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரபல தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒளிப்பதிவாளர் வேணுவை தனது படத்தில் இருந்து இன்னும் நீக்கவில்லை என்றும், ஊடகம் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் அப்படத்தின் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "மலையாளத் திரையுலகில் நான் மிகவும் மதிக்கும் ஆளுமைகளில் வேணுவும் ஒருவர். அவர் இதுவரை எந்த படத்தில் இருந்தும் யாரும் வெளியேற்றியதில்லை.
இந்த படத்திலும் யாரும் அவரை நீக்கவில்லை. அவரே தனது விருப்பப்படி படத்தில் இருந்து விலகி கொண்டார். எனக்கு படங்கள் இயக்கவும் பிடிக்கும், நடிக்கவும் பிடிக்கும். இந்த படத்தை இயக்க அறிவுறுத்தியதே வேணு தான். அவரை படத்தில் இருந்து நீக்கியதாக இப்போது பரவும் போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்; பரப்ப வேண்டாம்." என்றார்.