தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது படங்கள் சில தோல்வியை தழுவினாலும் ரசிகர்கள் அதனை வசூல் ரீதியாக வெற்றியடைய செய்து விடுவர். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாது பைக் ரேஸிலும் கில்லாடி. இதனாலே அவர் அடிக்கடி பைக்கில் ஊர் ஊராக பயணம் செய்வார். இப்படி பல்வேறு மாநிலங்கள், நாடுகளுக்கு பயணம் செய்து புதுவித அனுபவத்தை தேடிக்கொள்வார்.
இவரது நடிப்பில் கடந்த மாதம் 'துணிவு' படம் வெளியானது. வழக்கம்போல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. துணிவு படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. இதையடுத்து அவர் தனது அடுத்த படமான AK 62 படத்தின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இன்னும் இயக்குநர் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அஜித் தனது ஓய்வுக்காக மீண்டும் வெளியூர் சென்றுள்ளார். இந்த முறை ஸ்காட்லாந்து சென்றுள்ள அவர், லாக்கர்பி 'பான் ஆம் விமானம் 103' குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விமான வெடிகுண்டு விபத்தில் 259 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களும் இடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவர். அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் அனைவர் சார்பாகவும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தற்போது லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித், அந்த மக்களுக்கு மரியாதையை செலுத்தியுள்ளார்.
பான் ஆம் விமானம் 103 (Pan Am Flight 103) :
கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி 'பான் ஆம் விமானம் 103' (Pan Am Flight 103) விமானம் ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம் ஸ்காட்லாந்தின் மேல் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. இதையடுத்து விசாரிக்கையில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அந்த விமானத்தின் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த 243 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் என 259 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதியில் மோதியதில் 11 குடியிருப்பு வாசிகளும் பலியானர். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கையில் இந்த விவகாரத்தில் லிபியா நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. இந்த வழக்கில் லிபியா நாட்டின் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக லிபியா நாட்டின் அப்போதைய அதிபராக இருந்த கடாபி என்பவர் மீதும் புகார் வைக்கப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு அவர் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்தார்.
தற்போது வரை இந்த குற்றத்தை யார் செய்தார் என்று நிரூபனம் ஆகவில்லை. எனினும் இது லிபியா நாட்டிற்க்கு ஒரு நீங்க கறையாகவே இருக்கிறது. இந்த வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் 270 பேரில் 179 பேர் அமெரிக்காவையும், 43 பேர் பிரிட்டனையும், 3 பேர் இந்தியாவையும், மீதமுள்ளவர்கள் மற்ற சில நாடுகளையும் சார்ந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இருப்பதால், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் தலையிட்டு ஐ.நா-விசாரணைக்கு முறையிட்டனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இதில் மெக்ராஹி என்பவர் 2001-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ப்ரோஸ்டேட் கேன்சர் இருந்ததால் கருணையின் அடிப்படையில் 2009-ல் ஸ்காட்டிஷ் அரசால் விடுதலை செய்யப்பட்ட இவர், 2012-ல் உயிரிழந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக மூன்றாவதாக மசூத் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மசூத் என்பவர் லிபியா அதிபராக இருந்த கடாபியின் உளவுத்துறை முகவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவும் - குண்டு வெடிப்பும்.. பின்னணி ?
ஆதிக்க சக்தியாக இருக்கும் அமெரிக்காவை பல நாடுகள் அப்போது எதிர்த்தன. அந்த வகையில் லிபியாவும் அமெரிக்காவை வெறுத்தது. ஆனால் லிபியாவில் அரசுக்கு எதிராக ஒரு கூட்டம் இருந்துள்ளது. அவர்களுக்கு அமெரிக்க அரசு மறைமுகமாக உதவி வந்தது. அப்போது லிபியாவில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு உள்நாட்டு போரில் இரண்டு அமெரிக்க வீரர்கள் தங்கள் உயிரை இழந்தனர்.
இந்த நிகழ்வுக்கு பழி தீர்க்க அமெரிக்கா, லிபியா மீது குண்டு வெடி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் லிபியா நாட்டை சேர்ந்த பலரும் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இந்த கோர நிகழ்வுக்கு பழி வாங்க வேண்டும் என எண்ணிய லிபியா, அமெரிக்கர்கள் அதிகமாக பயணம் செய்த Pan Am Flight 103-ஐ கடத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.