புரூஸ் லீ விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்!
புருஸ் லீயைப் பற்றிய பேச்சுகளில் அதிகம் பேசப்படும் விஷயம் இது.
முதன்முதலாக திரையில் ஒரு அமெரிக்கனல்லாத இளைஞன் சிறிய உருவில் தோன்றியவன் புரூஸ் லீ. சண்டைக் காட்சிகளில் அவன் வெறுமனே சண்டை இடவில்லை. உடல் மொத்தத்தையும் சற்று குறுக்கி இறுக்கிக் கொண்டான். அவன் முகமும் இறுகியிருக்கும். சிறிய கண்களுக்குள் வீரம் திமிர் கொண்டிருக்கும். எதிரியை நோக்கி அவன் அடித்த ஒவ்வொரு அடியும் அத்தனை வேகம் கொண்டதாக இருந்தது.
அமெரிக்க சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே சடசடவென புரூஸ் லீயின் புகழ் வளர்ந்தது. குங்க் ஃபூ, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகள் புகழ்பெற்றன. சினிமாவில் காட்டப்படாத விஷயங்களை மொத்தமாக ரசிகர்களுக்கு கொடுத்து ஈர்த்தார் புரூஸ் லீ. மிக எளிமையான உடல்வாகு கொண்ட ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவன் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்திய விஷயங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகுக்கே புதியவையாக இருந்தன.
புரூஸ் லீயின் படங்களுக்கு அடிநாதமாக ஒரு சில விஷயங்கள் மட்டும்தான் இருந்தன.
தற்காப்புக் கலைகள் மீதான புரூஸ்லீயின் ஆர்வத்தை படங்களின் நாயகனும் கொண்டிருப்பார். ஆசிய நாடு ஒன்றில் பிறந்ததற்கான பெருமிதம் நாயகனிடம் இருக்கும். அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய மக்களின் வாழ்க்கைகள் பின்புலமாக இருக்கும். அதிகாரத்தின் எல்லா வடிவங்களையும் நாயகன் எதிர்ப்பார். நாயகனை சிறுமைப்படுத்தும் ஒரு காட்சியேனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அத்தகைய சிறுமைகளிலிருந்து நாயகனை அவரே காத்துக் கொள்ள வேண்டுமென்கிற சூழல் எழும். அச்சூழலில் நாயகனுக்கு கை கொடுப்பது அவரின் தற்காப்பு கலையாக இருக்கும்.
புரூஸ் லீயை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த படம் Enter the dragon வெளியானபோது புரூஸ் லீ உயிருடன் இல்லை.
1973ஆம் ஆண்டு. ஜூலை மாதம் 20ஆம் தேதி. காலை.
அடுத்து எடுக்கவிருந்த Game of death என்ற படத்தில் நடிக்க வைப்பதற்காக ஜார்ஜ் லேசன்பி என்பவரை சந்தித்தார் புரூஸ் லீ. லேசன்பி ஆஸ்திரேலிய நடிகர். புகழின் உச்சியில் இருக்கும் புரூஸ் லீயுடன் நடிப்பதில் அவருக்கு பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. அவரை சந்தித்த பிறகு, பெட்டி டிங் பெய் என்ற நடிகையை புரூஸ் லீ சந்திக்கவிருந்தார். மதிய உணவுக்கு நடிகையின் வீட்டுக்கு சென்றார். மாலை ஆறு மணி ஆனதும் புரூஸ் லீயின் வியாபார பார்ட்னர் ரேமண்ட் சாவ்வும் அங்கு வந்து சேர்ந்தார். மூவரும் சேர்ந்து இரவுணவுக்கு ஜார்ஜ் லேசன்பியை சந்திப்பதென முடிவெடுக்கப்பட்டது. கிளம்புகையில் புரூஸ் லீ தலைவலிப்பதாக சொன்னார். உடற்கட்டுக்காக பலவித பயற்சிகளை எடுப்பதால் புரூஸ் லீக்கு அவ்வப்போது தசை வலி ஏற்படுவதுண்டு. பெட்டியும் புரூஸ் லீக்கு ஒரு தலைவலி மாத்திரையும் சில வலி நிவாரண மருந்துகளையும் கொடுத்தார். சிறிது நேரம் ஓய்வு எடுத்து பார்த்தபிறகும் முடியவில்லை. மற்ற இருவரையும் சென்று லேசன் பியை சந்திக்க சொல்லிவிட்டு புரூஸ் லீ ஓய்வெடுக்கச் சென்றார். பெட்டியின் படுக்கையறைக்கு சென்று படுக்கையில் விழுந்தார் புரூஸ் லீ. திரும்ப எழவே இல்லை.
திடீரென நேர்ந்த புரூஸ்லீயின் மரணத்தை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. மரணம் கொண்டிருந்த மர்மமே புரூஸ்லீயையும் இன்னும் பெரிய நாயகனாக மாற்றியது. அடுத்த நாள் வந்த நாளேடுகள் தொடங்கி இன்றைய ஊடகங்கள் வரை புரூஸ்லீயின் மரணத்துக்கு பல காரணங்களைச் சொல்கின்றன. பிரதானமாக சொல்லப்படும் காரணம்தான், விஷம்!
Enter the dragon படம் வெளியான பின் புரூஸ்லீயை எதிர்கொள்ள உலகம் திணறியது. ஒல்லிதேகம், புது வகைச் சண்டை, அதற்குள் ஒளிந்திருக்கும் புத்தனின் சிந்தனை போன்றவை முன்னெப்பேதும் கண்டிராத ஒருங்கிணைவு. சண்டை போடுபவனை ஆர்ப்பாட்டமாக திரையில் கண்டிருந்த ரசிகர்கள், பேரமைதியுடன் ஒருவனால் பெரும் ஆக்ரோஷத்துடன் சண்டை போட முடியும் என்பதை முதன்முறையாக பார்த்தார்கள். அளவுகடந்த நேர்த்தி, ஆர்ப்பாட்டமில்லாத கோபம், ஆன்மிக ஒழுங்குடன் கூடிய தாக்குதல் ஆகியவற்றை தன் வழியே புரூஸ்லீ உலகுக்கு கொடுத்தான்.
அமைதி மற்றும் ஆக்ரோஷம் போன்ற முரணான விஷயங்கள் எப்படி ஒன்றாக முடியுமென தெரியாமல் நாம் திணறினோம். புரூஸ்லீ முன்வைத்த கலைப்படிமத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அதை விளக்குவதற்கு புரூஸ் லீயும் உயிருடன் இல்லை. புரியாத விஷயங்களை கையாள்வதற்கு சுலபமான வழி அவற்றை புரியாத இடத்திலேயே விட்டுவிடுவது. புரூஸ் லீயையும் புரியாத இடத்திலேயே விட்டுவிட முடிவு செய்தோம். புரூஸ் லீயிடம் நமக்கு புரியாதவற்றை மர்மங்களாக்கி, மேலும் மர்மங்களை கட்டி அவனை புனிதத்துக்குள் ஒளித்து வைத்தோம். புரூஸ் லீயை நாம் அனைவரும் சேர்ந்து சீன டிராகனாக மாற்றினோம்.
புரூஸ்லீயின் மரணம் கொண்டிருக்கும் மர்மத்தை பொறுத்தவரை உண்மை என்ன தெரியுமா? புரூஸ் லீயை நாம் புரிந்து கொள்ளவில்லை. அவர் வெளிப்படுத்திய சீனக் கலாசாரம் நமக்குத் தெரியாது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஒருவனால் 32 வயதில் மரிக்க முடியாது என நினைக்கிறோம். புரியாத விஷயங்களை தொடுத்துப் பின்னி புரியாத மர்மமாக புரூஸ் லீயை ஆக்கி வைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.
ஜூலை 20, 1973.
மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த புரூஸ் லீ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உயிரற்ற புரூஸ் லீயின் உடலில் உயிர் திரும்ப மருத்துவர்கள் பலவித முயற்சிகள் எடுத்தனர். அவர் எழவில்லை. இரவு 11.30 மணிக்கு புரூஸ் லீ உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கை வெளியானது. புரூஸ் லீ தூங்கியிருந்த போது அவரது மூளை 13% வீங்கியதாக அறிக்கை கூறியது. தலைவலிக்கென அவர் எடுத்துக் கொண்ட மருந்து அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை கொடுத்திருக்கலாம் அல்லது பக்கவிளைவு கொடுத்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
உலகமே கொண்டாடும் ஆதர்ச நாயகனுக்கு இப்படியொரு அற்ப மரணம் நேர்ந்ததை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. என்ன செய்வது?
உலகத்தையே கட்டிப்போடும் பெரும் டிராகனாக இருந்தாலும் அறிவியலுக்கு பணியவில்லை எனில், மரணம்தான்.