சமூக, சூழலியல் பிரச்சனை- இன்றைய பிரச்சனை என்பதையும் தாண்டி அது தலைமுறைகளை இல்லாமல் செய்துவிடும் பிரச்சனை என்பதை உரக்கச்சொல்கிறார் ரணசிங்கம்.
வெளிநாட்டு வேலை என்றாலே பெரும்பாலும் கேட்பவர்களுக்கு பெருமையாக இருக்கும். நன்கு படித்து பெரிய அளவில் வருமானம் ஈட்டும் வசதி படைத்தவர்களுக்கு அது உண்மையாக இருக்கலாம். மழை பொய்த்து விவசாயம் இல்லாமல், குடும்பத்தை பாதுகாக்க வேலைவாய்ப்பின்றி அடிமை தொழிலாளர்கள் கணக்காய் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டிக்கு செல்பவர்களுக்கு அது தலைகீழான விஷயம். மேலோட்டமாய் பார்த்தால் அப்படி வேலைக்குச் செல்பவர்களுக்கும், கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமே, அது உயிருக்கு உத்தரவாதமில்லாத ஆபத்து என்பதை உணர முடியாது.
பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் என குடும்பத்தினர் அனைவரும் பிரச்சனையின்றி வாழ, ஒற்றை உயிர் கத்தியில் நடக்கும் பயணம் அது. அப்படி நம்மைச்சுற்றி அன்றாடம் நிகழும் உண்மைக் கதையை ஒட்டியே தொடங்குகிறது படத்தின் கதை.
“போ.. எடுத்துட்டுபோ.. நான் இந்தியாவே இல்லன்னு எழுதிக்க போ..” நெஞ்சியில் ஈட்டியாய் பாயும் முதல் வசனம்.
“அதிகாரத்தோட உச்சாணிக் கொம்புல இருக்கவங்களுக்கு.. அடிபட்டவங்களோட வலியை கொஞ்சம்கூட குறையாம புரிய வைக்கனும் சேகரு..” - என்றபோதெல்லாம் உதவ யாருமற்றவளாய் புறக்கணிப்பை சந்தித்து சந்தித்து, ரணசிங்கத்தின் முகத்தைக் காண, நெருப்பில் பழுக்கக் காய்ச்சி பலமுறை அடிக்கப்பட்டு கூர்மையான ஆயுதமாய் அரியநாச்சி கதாபாத்திரம் நிற்கிறது.
“நாம உண்மையா வேலை செஞ்சா யாராவது ஒருத்தர் நம்மள கவனிப்பாங்க.. அவங்க நமக்கு துணையா இருப்பாங்க” - துளி ஆறுதல்.
இறுதியில் ‘ஏதோ ஒரு பொணத்த கொடுத்து, கணக்கையும் முடிச்சுக்கிட்டாங்க ** பசங்க’ என உடையும் அழுகை
தற்போதைய சமகால அரசியல் சூழலைச் சுட்டி அரசுக்கு விழுந்த அறை போல இருந்தது.
ஸ்ரீதேவியின் மரணத்தை வைத்து சிரியா இனப்படுகொலை உட்பட நாட்டின் அத்தனை பிரச்சனையையும் ஒளித்த செய்தி ஊடகங்கள்..
மீனவர்கள் காணாமல் போவதைப்போல.. இந்த வழக்கையும் விட்ருவிங்கன்னு பேசிக்கிறாங்க..
அமெரிக்காவுக்கா போக முடியும்.. நம்ம நிறத்த பார்த்தாலே சுட்டுக் கொன்னுடுவானுங்க..
என காட்சிக்கு காட்சி சனங்களிடம் பேச வேண்டியதை பேசியிருக்கிறார் இயக்குநர்.
சமீபத்தில் கலைஞர் செய்திகளுக்கு இயக்குநர் அளித்த பேட்டியில் “நீங்க கண்டுக்காம போன கதையை நான் கண்டுக்கிட்டேன்” என சொன்னது நிதர்சனமான உண்மை.
சங்க நாதத்துடன் க்ளைமாக்ஸில் வரும் ஒப்பாரி பாடலில் ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என ஒரு வரி..
அழும் பிள்ளைக்கு பால் கிடைக்கிறதா...?
இங்கு மக்கள் கதறிக் கதறி அழக்காரணமாகவே அரசாங்கம் இருக்கிறதே..
அழுதே மூச்சுத் திணறி மாண்டாலும், அதை அலட்டிக்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதுதான் அதிகாரத்தில்
இருப்பவர்களின் அடையாளமாக மாறிப்போயிருக்கிறது என்பதை கொஞ்சமும் வலி குறையாமல் படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் தோழர்.விருமாண்டி.