சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள பிரதான சொற்களில் ஒன்று “புள்ளிங்கோ”. சமீப நாட்களில் இந்த புள்ளிங்கோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத நெட்டிசன்களே அரிது. அந்த அளவுக்கு இந்த வார்த்தைப் பிரயோகம் அனைவர் மத்தியிலும் சென்றடைந்திருக்கிறது.
இந்த புள்ளிங்கோ வார்த்தை ட்ரெண்ட் ஆகக் காரணமாக இருந்தவர் இளம் கானா பாடகர் ஸ்டீபன். கல்லூரி மாணவராக இருக்கும் ஸ்டீபன் கடந்த மார்ச் மாதம் யூடியூப்பில் வெளியிட்ட ‘புள்ளிங்கோ’ கானா பாடல் தற்போது வரை 4 கோடி பார்வையாளர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய்யின் ‘பிகில்’ படத்தில் வரும் வெறித்தனம் என்ற பாடலிலும் இந்த புள்ளிங்கோ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதால் இன்னும் பிரபலமடைந்து வருகிறது.
அதன் பிறகு புள்ளிங்கோ என்றாலே டியோ பைக், க்ராக்ஸ் ஷூஸ், ஒருபக்க ஹேர் ஸ்டைல், ஜாக்கர்ஸ் என்ற ட்ரெண்ட் செட்டை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், புள்ளிங்கோ பாடல் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கானா பாடகர் ஸ்டீபன் முன்பை விட இன்னும் பிரபலமாகியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கானா ஸ்டீபன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “புள்ளிங்கோ பாடல் இந்த அளவுக்கு வைரலாகும் என கனவில் கூட நினைத்தது இல்லை; பாடல் வெளியான பிறகு பிஸியானதால் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது”
“இதனால் ஏகப்பட்ட அரியர்ஸும் வந்துவிட்டது; இருப்பினும் இந்த கானா பாடல் பாடுவதன் மூலம் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது; ஆனால், கல்லூரிப் படிப்பை முடித்திடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது; சினிமா படங்களிலும் பாடுவதற்கு கமிட் ஆகியிருக்கிறேன், ஏற்கெனவே பாடியும் உள்ளேன்” என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.