சினிமா

“புதிய அலை இயக்குநர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தவர்” : அனுராக் காஷ்யப் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

அனுராக் காஷ்யப் சினிமாக்கள் ஏற்படுத்திய அலையும், தாக்கமும் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் முக்கியமானது.

“புதிய அலை இயக்குநர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தவர்” : அனுராக் காஷ்யப் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அனுராக் காஷ்யப்... இவர் சினிமாக்கள் ஏற்படுத்திய அலையும், தாக்கமும் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் முக்கியமானது. New wave Cinema, Alternate Cinema என ஸ்டைலாக புதுப்புது பெயர்கள் சொல்லிக் கொண்டாலும், அனுராக் செய்தது ஒரு வகையில், இன்று வரும் பல அழுத்தமான பாலிவுட் படங்களுக்கான திறப்பு. அவரால்தான் எல்லாமுமா? என்றால் இல்லை. ஆனால், அவரின் வெற்றி பலருக்கும் தீவிரமான நம்பிக்கையைத் தந்தது.

“Films are like oxygen for me” என்று இயங்கும், “Cinema is much more than heroes and villains” என வித்தியாசமான களங்களில் கதை சொல்லும் அந்தக் கலைஞனின் பிறந்தநாள் இன்று.

திரைப்பட விழாவில் Vittorio De Sica இயக்கிய `பைசைக்கிள் தீவ்ஸ்’ பார்த்து சினிமா கனவுகளுடனும் 5,000 ரூபாயுடனும் மும்பை வந்திறங்கினார் அனுராக். சீக்கிரமே பணம் தீர்ந்துவிட, தெருக்களில் வசிப்பு, பார்க் மேஜைகளில் உறக்கம் என சினிமா வாய்ப்புத் தேடி வருபவர்களுக்கே உண்டான சிரமங்கள். ப்ருத்வி தியேட்டரில் நாடகம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்க, அதுவும் நாடக இயக்குநரின் மரணத்தால் பாதியில் நின்றுவிடுகிறது.

பிறகு சீரியல் இயக்குநர் ஷிவம் நாயரின் பரிச்சயம், டிவி சீரியல்களுக்கு எழுதுவது என நகர்ந்தது வாழ்க்கை. Martin Scorseseயின் `டாக்ஸி ட்ரைவர்’ பார்த்ததும் சினிமா மீது இன்னும் வெறி அதிகமாகிறது. நண்பர்களுடன் இணைந்து நிறைய எழுதுகிறார். ஆனால், ரிலீஸில் பிரச்னை அல்லது படப்பிடிப்புக்கே செல்லாமல் ஸ்க்ரிப்ட் மூலையில் வீசப்படுகிறது. இந்தச் சூழலில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் மூலம் கிடைத்தது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் அறிமுகம்.

“புதிய அலை இயக்குநர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தவர்” : அனுராக் காஷ்யப் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

அனுராகின் எழுத்து RGVக்குப் பிடித்துவிட, தன்னுடைய `சத்யா’ படத்தில் பணிபுரிய சொல்கிறார். சௌரப் ஷுக்லாவுடன் இணைந்து `சத்யா’வை எழுதியதன் மூலம் துவங்குகிறது அனுராகின் சினிமா பயணம். சத்யா வெளியாகி பயங்கர வெற்றியடைந்தது, இன்று வரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறதும் கூட. `சத்யா’வுக்குப் பிறகு அனுராக் வாழ்க்கையே மாறும்,  படம் இயக்குவார், வெற்றியடையும், விருதுகள் கிடைக்கும், பேட்டிகள் கொடுத்து திணறுவார் என நினைக்கலாம். ஆனால், யதார்த்தம் அனுராக்கின் சினிமா போல் பயங்கரமாகத்தான் இருந்தது. படங்களுக்கு வசனம் எழுதுவது, குறும்படம் எடுப்பது என இருந்தவருக்கு படம் இயக்கும் வாய்ப்பும் அமைந்ததுதான்.

1976ல் புனேயில் நடந்த ஜோஷி - அபியங்கர் தொடர் கொலை சம்பவத்தை மையமாக வைத்து தனது முதல் படத்தை இயக்கினார் அனுராக். `பான்ச்’ என்ற அந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழு, படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை. 2001ல் சில காட்சிகளில் திருத்தம் சொல்லி சான்றிதழ் அளித்தும் தயாரிப்பாளருக்கு சில நெருக்கடிகள் இருந்ததால் படத்தை வெளியிடமுடியவில்லை. இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனுராகின் முதல் படம் வெளியாகவே இல்லை என்பதை யோசிக்க முடிகிறதா? அதன் பின் மணிரத்னத்தின் `யுவா’ போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதிக் கொடுத்தவர் அடுத்து, `ப்ளாக் ஃப்ரைடே’வில் படமாக்கியதும் ஒரு நிஜ சம்பவத்தைதான். அந்தப் படத்துக்கும் சிக்கல்கள் எழுந்து இரண்டாண்டுகள் கழித்தே வெளியானது.

மூன்றாவதாக, ஸ்டீஃபன் கிங் எழுதிய Quitters, Inc. சிறுகதையைத் தழுவி எடுத்த `நோ ஸ்மோக்கிங்’ பயங்கரமான தோல்வி. இப்படி வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்கலாக அமைந்த பின்னும், வழக்கமாக வரும் பாலிவுட் சினிமாவை எடுக்க மட்டும் ஒருபோதும் யோசிக்கவில்லை அனுராக். `ரிட்டர்ன் ஆஃப் ஹனுமன்’ எனும் குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் கூட இயக்கினார். ஆனால், பாலிவுட் மசாலா படங்கள் பக்கம் பேனாவைக் கூட திருப்பவில்லை. தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம். ஆனால், பத்தோடு பதினொன்றாக ஒரு பாலிவுட் படம் இயக்க துளியும் விருப்பமில்லை. சினிமாவில் சொல்லப்படாத கதை என்ற ஒன்று இல்லவே இல்லை. சொல்லும் விதம் மட்டும்தான் மாறிக் கொண்டிருக்கிறது என்பது அனுராகிற்கு புரியாதா என்ன?

“புதிய அலை இயக்குநர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தவர்” : அனுராக் காஷ்யப் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

எனவே, அதுவரை அத்தனை மொழிகளிலும் அடித்து துவைத்த அரதப்பழைய கதை ஒன்றை கையில் எடுத்தார். தேவதாஸ் - பார்வதியின் காதல் கதை. சோகம் பிழியும் தேவதாஸையும், பார்வதியையும் மார்டன் டைமுக்குள் புகுத்த உருவானது `தேவ் டி’. படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. படம் பார்த்த பல ரசிகர்களுக்கும் அனுராகின் வித்தியாசமான மேக்கிங், புது கதை சொல்லல் எல்லாம் அதுவரை இல்லாத சினிமா அனுபவத்தைக் கொடுத்தது.

இங்கிருந்து அனுராக்கின் படங்கள் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. இதன் பின் அவர் சமீபத்தில் இயக்கிய மன்மர்ஸியான், அடுத்து டாப்ஸியை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஹாரர் படம் வரை நாம் அறிந்ததுதான். நடிகராகவும் அவ்வப்போது தலை காட்டியவர், முருகதாஸ் இயக்கிய `அகிரா’வில் அசத்தியிருப்பார், தமிழிலும் நடிகராக வெறிமுகம் காட்டிய `இமைக்கா நொடிகள்’ பலராலும் பாராட்டப்பட்டது.

ஒரு பயணமாகப் பார்த்தால் பல இயக்குநர்களுக்கும் இருக்கும் சிரமம்தான் அனுராகிற்கு இருந்ததுமே. ஆனால், அதைத் தாண்டி வந்தவர் என்ன செய்தார், செய்துகொண்டிருக்கிறார் என்பதுதான் அவரைத் தனித்துக் கவனிக்க வைக்கிறது. அனுராக் வருகைக்குப் பின்தான் எல்லாம் மாறியது என்றால் அதற்கு முன் இந்தியில் நல்ல சினிமாக்களே வந்ததில்லையா? என்ற கேள்வி எழலாம். எழுந்திருக்கிறதுதான். ஆனால், அனுராக் படங்களில் இருந்த விஷயங்களை கவனித்தவர்களுக்கு எதை மாற்றி இருக்கிறார் என்பது புரியும்.

“புதிய அலை இயக்குநர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தவர்” : அனுராக் காஷ்யப் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

காதல் உருகும் தேவதாஸ் - பார்வதி கதையில், அனுராக் சொன்னதும் அன்புதான் நிரந்தரம் என்பதைத்தான். ஆனால் தேவதாஸின் காதல் புனிதம் தெரியுமா என்றபடி இல்லாமல், இப்போதைய தேவதாஸ்கள் எவ்வளவு ஈகோ கொண்டவர்கள் என்பதையும் சேர்த்தே சொல்லியிருந்தார். That Girl in Yellow Boots தரும் அதிர்ச்சியை எல்லாம் சொல்லி விளக்கமுடியாது, படம் பார்த்து பெற வேண்டியது. `கேங்ஸ் ஆஃப் வாசிப்பூரி’ன் இரண்டு பாகங்களிலும் இருந்த கொந்தளிப்பை பற்றி விவரிக்கவும் வேண்டுமா என்ன? அதோடு இல்லை, அக்லி, பாம்பே வெல்வெட், ராமன் ராகவ் 2.0, முக்காபாஸ், மன்மர்ஸியான் என வெற்றி தோல்வி மேல் ஆர்வம் கொள்ளாமல், தொடர்ந்து விதவிதமான அனுபவங்களை தரும் சினிமாவை அளித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டுக்கு அனுராக் செய்ததில் குறிப்பிடவேண்டியது சில இருக்கிறது. அதில் மிக முக்கியமானது அடுத்து வரும் தலைமுறை இயக்குநர்களுக்கான நம்பிக்கையாக மாறியது. அதனாலேயே அனுராகின் வெற்றி அவருக்கு மட்டுமான வரவேற்பு இல்லை. அவரோடு ஒரு கூட்டத்தையே அழைத்து வரக் கிடைத்த வரவேற்பு. வெறுமனே காதல் சினிமாக்களை எடுத்துக் கொண்டிருந்த இந்தியில், காதல் உறவுகளுக்கு இடையே வரும் உளவியல் சிக்கல்கள் பற்றிய சினிமாக்கள் அதிகமானது.

காமெடி ஜானரில் உருவான Vicky Donner, Sperm Donation பற்றி பேசியது, Titli சமூக ஏற்ற இறக்கத்தை அதன் குரூரத்தை கைகாட்டியே பேசியது, கில்லி படத்தை இந்தியில் ரீமேக் செய்த இயக்குநரை `பதாய் ஹோ’ படம் மூலம் Old age Pregnancy பற்றிப் பேச வைத்தது. இதற்கெல்லாம் முழுக்காரணம் அனுராக் எனச் சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் இதற்கெல்லாம் ஆரம்பம் அனுராக்தான்.

“புதிய அலை இயக்குநர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தவர்” : அனுராக் காஷ்யப் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

ஆங்கில சீரிஸ்கள் மட்டுமே ஹிட்டடிக்கும் நெட்ஃப்ளிக்ஸில், இந்திய சீரிஸும் ஹிட் அடிக்கும் என `சேக்ரெட் கேம்ஸ்’ மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்து, இன்னொரு தளத்துக்கான கதவையும் திறந்துவிட்டிருக்கிறார் அனுராக். இத்தனைக்குப் பிறகும் மற்ற மொழிகளில் வரும் நல்ல சினிமாக்களை பற்றி பேசவும், பாராட்டவும் நேரம் வைத்திருக்கிறார்.

சுப்ரமணியபுரம், நான் கடவுள், பருத்திவீரன் படங்கள் தொடங்கி காலா, வடசென்னை, சூப்பர் டீலக்ஸ் வரை, தான் பார்த்த தமிழ் சினிமாக்களை பாராட்டியதை நாமே பார்த்திருக்கிறோம். அனுராக் எப்போதும் நிலைத்திருங்கள்... தொடர்ந்து இன்னும் பல சினிமாக்கள் மூலம் ஆச்சர்யத்தில் ஆழ்த்துங்கள். சினிமா சினிமா என தன்னைச் சுற்றி திரைப்படங்களையே சுவாசமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞனுக்கு வாழ்த்துகள்!

Related Stories

Related Stories