சினிமா

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர் : ‘கலைஞரும் சினிமாவும்’!

தமிழை ஆள நினைத்த மொழிகளைக் களையெடுத்ததே ‘முத்தமிழறிஞரின் முதல் போர்’. இதற்காக அவர் கையிலெடுத்த பலம் வாய்ந்த ஆயுதம் தான் பேனா! அதன் கூர்மை அன்றைய வரலாற்றின் ஒரு சான்று.

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எண்ணத்தை வண்ணமாக்கிக் காட்டும் எழுத்தாளர், எமர்ஜென்சிக்கு எதிராக ‘முரசொலி’த்த பத்திரிகையாளர், மாற்றுக் கருத்துகள் கொண்டவரையும் மயக்கும் பேச்சாளர்,  ‘காவியம் மட்டுமல்ல, ஓவியமும் வரையத் தெரியும்’ என்று நிரூபித்த கார்ட்டூனிஸ்ட், அனல் பறக்கும் வசனங்களைத் தீட்டிய வசனகர்த்தா, கவியரங்கங்களில் கலகலப்பூட்டிய கவிஞர் என்று கலைஞருக்குப் பல முகங்கள் உண்டு. ‘உடன்பிறப்புகளே’ என்று ஒலிக்கும் ஒற்றைக் கர்ஜனை இப்போது ஓய்ந்துவிட்டாலும், இன்னும் பல்லாண்டுகள் பல கோடி இதயங்களில் எதிரொலித்துக்கொண்டுதானிருக்கும். அப்படியானவர் தான் கலைஞர்.

இலக்கியவாதியாக, அரசியல்வாதியாக, பத்திரிகையாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக, கதாசிரியராக, பாடலாசிரியராக, படத்தயாரிப்பாளராக, நாடக நடிகராக.. என பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர் அவர்கள். எதற்கெடுத்தாலும் நேரமில்லை என சோம்பித்திரியும் மனிதர்கள் மத்தியில், இருபத்தி நான்கு மணி நேரமும் உழைப்பதில் சலிப்பில்லாத ஓய்வறியாச் சூரியன் அவர்.

பல்வேறு பணிகளுக்கிடையே தான் ஈடுபட்ட துறைகள் அத்தனையிலும் முத்திரை பதித்திருக்கும் கலைஞர், அரசியல் களத்தில் மக்கள் தொண்டாற்றத் தவறியவர்களைக் களையெடுத்ததோடு மட்டுமல்லாமல், தமிழை ஆள நினைத்த மொழிகளையும் களையெடுத்ததே ‘முத்தமிழறிஞரின் முதல் போர்’. இதற்காக அவர் கையிலெடுத்த பலம் வாய்ந்த ஆயுதம் தான் பேனா! அதன் கூர்மை அன்றைய வரலாற்றின் ஒரு சான்று.

புராணங்களின் கட்டுக் கதையும், வார்த்தைத் தோரணமும்  கட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை ‘வசன இலக்கியமாக’ ‘புரட்சியின் ஒற்றை ஆயுதமாக’ மாற்றிய வல்லமை கொண்ட கலைஞர், தனது 20வது வயதில் 1947ம் ஆண்டு ‘ராஜகுமாரி’ திரைப்படத்தின் வாயிலாகக் கலைத் துறைக்குள் கால் தடம் பதித்தார்! இந்த முழு தொகுப்பும், கலைஞரின் சினிமா பயணத்தை மட்டும் கொண்டாடவிருக்கிறது.

‘குடியரசு’ பத்திரிகையில் ‘பகுத்தறிவுப் பகலவன்’ பெரியாரின் மாணவனாக அரசியல் கல்வி கற்றுக் கொண்டிருந்த கலைஞர், பெரியாரின் ஆசீர்வாதத்துடன் திரைத்துறைக்கு வந்தார். பிரபல பின்னணிப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் தனது மைத்துனர் கலைஞரின் எழுத்து வளம் பற்றி இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் ஒருமுறை எடுத்துச் சொல்லவே, ‘ராஜகுமாரி’ படம் ஆரம்பித்தபோது அழைக்கப்பட்டார். ‘ராஜகுமாரி’யில் கலைஞருக்கு ‘வசன உதவியாளர்’ வேலைதான் முதலில் தரப்பட்டது. அவருக்குள் புதைந்து கிடந்த இலக்கியத் தமிழால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் சாமி,  படத்தின் முழுவசனத்தையும் எழுதும் பொறுப்பை கலைஞரிடமே தந்தார். அதுவே அவரது வசன வாசலுக்கான திறவுகோலாக அமைந்தது.

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!

இதுவரை கேட்டிராத புதுமையான வசனங்கள் அவை. திரையில் அதைக் கேட்டதும் மனதுக்குள் புரட்சி அலையை ஏற்படுத்தியது. அப்படியான படமாக மக்கள் மனதில்  நின்ற படம் ‘ராஜகுமாரி’. அதில் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சும்; கலைஞரின் வசன வீச்சுமாக மனதில் நின்றது. ஆனால், அந்த வசன வரவேற்புக்கு ஏ.எஸ்.ஏ. சாமியே ஏகபோக உரிமை எடுத்துக் கொண்டார்! கலைஞரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. காலம் கனிந்து வரட்டுமென மௌனம் சாதித்தார் கலைஞர்!

ராஜகுமாரியின் வெற்றியைத் தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் ‘அபிமன்யூ’ என்கிற புதிய படத்தை ஆரம்பித்தது. அதிலும் எம்.ஜி.ஆர்தான் ஹீரோ, வசனம் எழுதும் பொறுப்பு கலைஞருக்கு வழங்கப்பட்டது. இயக்குனர், ஏ.எஸ்.ஏ.சாமியேதான்! அந்தப் புராண கதைக்கு புதிய கோணத்தில் இலக்கிய நயத்தோடு வசன மழை பொழிந்தார் கலைஞர். இந்த முறையும் கலைஞருக்கு உரிய கௌரவம் வந்து சேரவில்லை! இயக்குனரே வசன உரிமையை எடுத்துக்கொண்டார். கொதித்துப் போன கலைஞர், பட முதலாளியிடம் காரணம் கேட்டபோது, “உன் பெயர் பிரபலமாகட்டும்; அதுவரை பொறுமையாக இரு!” எனச் சொல்லவே; கலக்கத்துடன் அந்த கம்பெனியை விட்டு வெளியேறி, ஊர் திரும்பினார்.

‘ராஜகுமாரி’ தயாரிப்பில் இருக்கும்போது தான் எம்.ஜி.ஆர், கலைஞர் நட்பு மலர்ந்தது! அப்போது எம்.ஜி.ஆர், காந்தி பக்தர்! ஆகவே, கழுத்தில் உருத்திராட்ச மாலை - கதர் உடை என காட்சி தருவாராம் எம்.ஜி.ஆர்! கலைஞரோ, பகுத்தறிவு பாசறைக்காரர். முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்த போதிலும் இருவரும் நட்பில் எந்த விரிசலும் விழாமல் பார்த்துக் கொண்டனர். “அவர் எனக்கு காந்தியின் நூல்களைக் கொடுப்பார். நான் அவருக்கு அண்ணாவின் புத்தகங்களைத் தருவேன். அப்போது எங்களுக்குள் அடிக்கடி வாதங்கள் வரும்; ஆனாலும், எனது கருத்தை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., பின்னாளில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்” என்று சொல்லிச் சிலாகிப்பார் கலைஞர்.

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!

கலைஞருக்கும், அவரது நண்பரான எம்.ஜி.ஆருக்கும் 1950-ம் ஆண்டு திரைப் பயணம் திருப்புமுனையாக மாறியது. ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி, ‘அபிமன்யு’ ஆகிய படங்களில் வசனத்துக்காக பெயர் போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள். அந்தப் படங்களுக்கு கலைஞர் தான் வசனம் எழுதினார் என்கிற நிஜம் கவிஞர் கா.மு.ஷெரீப் மூலமாக பத்திரிகைகள் வாயிலாக பகிரங்கப்படுத்தப்பட்டது!

மார்டன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாட்டு எழுதும் ஆஸ்தான கவிஞராக இருந்த கவிஞர் கா.மு.ஷெரிப் மூலம் கலைஞரின் எழுத்து வன்மையை அறிந்த மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், கலைஞருக்கு அழைப்பு விடுத்தார்! அதன்படி திருவாரூர் சென்ற கவிஞர் கா.மு.ஷெரீப், கலைஞரை அழைத்து வந்து டி.ஆர்.சுந்தரம் முன் நிறுத்தினார்.

கலைஞரின் கை வண்ணத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ நாடகத்தின் சிறப்பை அறிந்த டி.ஆர்.சுந்தரம், அந்தக் கதையை அதே பெயரிலேயே படமாக எடுக்க முடிவு செய்தார். அப்போது மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் மார்டன் தியேட்டர்ஸ் கம்பெனியில் வசனகர்த்தாவாக அமர்த்தப்பட்டார் கலைஞர்!

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!

கதை முடிவாகி, கதாநாயகனைப் பற்றிய பேச்சு எழுந்தபோது, “வீர மோகன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக எம்.ஜி.ஆர். இருப்பார்” என  சிபாரிசு செய்து ‘மந்திரிகுமாரி’ படம் எம்ஜிஆருக்கு கிடைக்க காரணமாக இருந்தார் கலைஞர். ‘ராஜகுமாரி’, ‘அபிமன்யு’ படத்தின் போதே எம்.ஜி.ஆர் –  கலைஞர் இடையே நல்ல நட்பு இருந்தது! அந்த நட்பை மனதில் வைத்து, நண்பரை கை கொடுத்து தூக்கி விடும் நோக்கத்தில் ‘மந்திரிகுமாரி’க்கு எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கினார் கலைஞர்!  அந்தப் படம் அபாரமான வெற்றியைப் பெற்று, எம்.ஜி.ஆர் - கலைஞரை முன்வரிசைக்கு கொண்டு போனது! நட்புக்காக எதையும் செய்வார், தான் மட்டுமல்லாமல், மற்றவர்களையும் தோள் கொடுத்து தூக்கிவிடுவதில் கலைஞரை யாரும் மிஞ்சிவிடவும் முடியாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

தன்னை அடையாளம் காட்டப்போகும் முதல் வாய்ப்பு என்பதால் கலைஞர் தன் முழு ஆற்றலையும் தேக்கி கதை - வசனம் வடித்திருந்தார். ‘சுளீர்’ வசனங்கள், அப்போதைய அரசியல் தலைவர்களைச் சுட்டது! ஆகவே, ‘மந்திரிகுமாரி’ பட  வசனங்களை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்!

பட அதிபர்கள், புராண பக்திப் படங்களை; ராஜா - ராணி கதைகளை ஒதுக்காமலும், அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’ மாதிரியான சமூக புரட்சிப் படங்களை முழுமையாக ஏற்காமலும் இருந்த ரெண்டும்கெட்டான் காலமாயிருந்ததால் ‘மந்திரிகுமாரி’யை ராஜா - ராணி கதையாகவே படைத்திருந்தார் கலைஞர். தமிழ் இலக்கியத்தில், ஐம்பெரும் காப்பியங்களில் ஒரு காப்பியமான ‘குண்டலகேசி’யைத் தழுவித்தான் ‘மந்திரிகுமாரி’ கதையை உருவாக்கியிருந்தார். ‘வேலைக்காரி’யில் அறிஞர் அண்ணா சாமர்த்தியமாக பகுத்தறிவு பிரச்சாரம் செய்ததைப் போல, அவரது சிஷ்யரான கலைஞர், ’மந்திரிகுமாரி’யில் நம்பியார் ஏற்று நடித்த ராஜகுரு கதாபாத்திரம் வாயிலாக படு சாதுர்யமாக பகுத்தறிவு கொள்கையைப் பரப்பினார்!

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!

‘மந்திரிகுமாரி’யில் கலைஞரின் வசன வீச்சுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததும், பட அதிபர்களின் பார்வை கலைஞரின் பக்கம் திரும்பியது. ‘மந்திரிகுமாரி’ பட வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - கலைஞர் கூட்டணியில் வந்த ‘மருதநாட்டு இளவரசி’ படமும்  சக்கைப் போடு போட்டது! ஒரே வருடத்தில் ‘மருத நாட்டு இளவரசி, ‘மந்திரிகுமாரி’ எனத் தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் நட்சத்திர எழுத்தாளராக மாறினார்.

‘பராசக்தி’யில் சிவாஜிகணேசன் ஹீரோ என முடிவானதும்;  வசனம் எழுத ‘ரத்தக் கண்ணீர்’ புகழ் திருவாரூர் தங்கராசுவையும், இயக்குனராக ஏ.எஸ்.ஏ.சாமியையும் தயாரிப்பாளர்கள் நியமித்தனர்!  ‘பராசக்தி’யில் அறிமுகமாகயிருந்த புதுமுகம் சிவாஜிகணேசனை நேரில் பார்க்க இயக்குனர் ஆசைப்பட்டிருக்கிறார். அப்போது, சிவாஜிகணேசன் திருச்சியில் நாடக மேடையில் கர்ஜித்துக் கொண்டிருந்தார்.

தயாரிப்பாளர்களால் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, சிவாஜிகணேசனை நேரில் பார்த்து திருப்தியானார்! “நாளைக்கே சென்னைக்கு வரணும்; மேக்கப் டெஸ்ட் இருக்கு!” என சொல்லிவிட்டு இயக்குனர் புறப்பட; மறுநாள், விமானம் ஏறி சென்னை வந்து இறங்கினார் சிவாஜிகணேசன். அவர், சென்னை வந்து இறங்கியதுமே எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது! வசனகர்த்தாவாக கலைஞரும், இயக்குனராக கிருஷ்ணன் - பஞ்சுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்கள்.

மதத்தின் பெயரால் நடக்கும் மடத்தனத்தை கொளுத்திப் போட்டு, பகுத்தறிவு தீபம் ஏற்றிய ‘பராசக்தி’யில் கலைஞரின் நெருப்பு வசனங்களை, சிம்மக் குரலெடுத்து சிவாஜி கணேசன் பேசிய வசன வீச்சு; குறிப்பாக நீதி மன்ற காட்சியில் குமுறும் எரிமலையாய் - கொந்தளிக்கும் கடலாய்... உணர்ச்சிப் பிரவாகமாக  பொங்கி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது! கலைஞரின் வசனத்தில் ‘அனல்’ தெறித்தது! ‘வசனப் புரட்சி’ செய்த கலைஞருக்கு தமிழ் திரையுலகம் தனி சிம்மாசனம் தந்தது. ‘இனிமேல், பக்தி, புராண இதிகாசம், ராஜா - ராணி கதைகள் போணியாகாது! ‘பராசக்தி’ மாதிரி சமுதாய விழிப்புணர்வுக் கதைகளை அழகுத் தமிழில் அடுக்குமொழி வசனத்தோடு சொன்னால் தான் படம் ஓடும்!’ என்கிற ட்ரெண்ரை உருவாக்கித் தந்தது கலைஞரின் வசன வீச்சு!

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!

திசை தெரியாமல் எங்கோ சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை நல்ல பாதைக்கு திருப்பிவிட்ட ‘பராசக்தி’ படத்தின் மூலமாக சிவாஜிகணேசனும்; கலைஞரும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்கள். சிவாஜிக்கு நிறைய புதுப் படங்கள் ஒப்பந்தமாகின! ‘கலைஞர் எழுதினாலே அந்தப் படத்துக்கு வெற்றி உறுதி!’ என திரையுலகத்தில் பேச்சு எழுந்தது.

இப்படி ஒரு பக்கம் குதூகலமும், கொண்டாட்டமுமாய்  ‘பராசக்தி’ படக்குழுவினர் இருக்க, இன்னொரு பக்கம் ‘பராசக்தி’ படத்துக்கு தடை!’ என புரளியொன்றும் புறப்பட்டது! ‘பகுத்தறிவு பிரச்சாரம்; சமூக அவலங்களின் சாடல்!’ என்கிற பெயரில் ‘பராசக்தி’ பட வசனம் மூலமாக, இந்துமத கொள்கைகளை கேலி செய்திருப்பதாக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை வைத்தனர். மேலும் தமிழகமெங்கும் கண்டனக் கூட்டங்களையும் காங்கிரசார் நடத்தினர். இவையெல்லாமே இலவச விளம்பரமாகி ‘பராசக்தி’க்கு பலம் சேர்த்தது! முன்னைக் காட்டிலும்  ‘பராசக்தி’யைப் பார்க்க தியேட்டரில் கூட்டம் திரண்டது. வசூலும் பெருகியது.

நாடக உலகில் பிரபலமான கதாசிரியராகவிருந்த பம்மல் கே.சம்பந்த முதலியார் எழுதி மேடைகள் பல கண்ட ‘மனோகரா’ நாடக கதை உரிமையை வாங்கி, அதைத் திரைப்படமாக எடுக்க முன்வந்த எல்.வி.பிரசாத், நாடகக் கதையை திரை வடிவமாக்குவதில் கில்லாடியான கலைஞரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்! அந்த நாடகக் கதையை, தனக்கே உரிய அலங்காரத் தமிழில் அடுக்குமொழி வசனங்கள் தீட்டி; சினிமாவுக்காக சில வேலைப்பாடுகள் செய்து, தெளிவான திரைக்கதையாக்கிக் கொடுத்தார் கலைஞர்!

‘மனோகரா’வுக்கு எழுத ஒப்பந்தமான நேரத்தில், அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக கலைஞர் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்! ‘தன்னால் பட வளர்ச்சியில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது!’ எனக் கருதிய கலைஞர், ஜெயிலில் இருந்தபடியே  ‘மனோகரா’ படத்துக்கான திரைக்கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார். இந்தப் படத்தில் இருந்துதான் அவரது பெயர், ‘கலைஞர் மு.கருணாநிதி’ என டைட்டில் கார்டு போடும் வழக்கம் வந்தது!

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!

‘ஜூபிடர் பிக்சர்ஸ்’ பிரம்மாண்டமான முறையில் தயாரித்த  ‘மனோகரா’ படத்தை எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். மனோகரனாகத் தோன்றிய சிவாஜி காதல்; வீரம், சோகம், பரிவு, பிரிவு, பாசம்... என நவரசங்களையும் கொட்டினார். குறிப்பாக, அந்த ராஜ சபை காட்சியை சிலாகித்துச் சொல்லலாம்! “அழைத்து வரச் சொல்லவில்லை அரசே! இழுத்து வரச் சொல்லியிருக்கிறீர்கள்..!” என ஆரம்பித்து, கலைஞர் எழுதிய, நீண்ட நெடிய வசனத்தை மூச்சு விடாமல் பேசி முழங்கிய அந்தக் காட்சியில், சிம்மக் குரலெடுத்து சிங்கம் போல கர்ஜனை செய்து, உணர்ச்சிப் பிரவாகமெடுத்து சிவாஜி பேசிய அந்த அனல் வசனங்கள் ரசிகர்களின் நாடி நரம்புகளை சூடேற்றியது.

சமஸ்கிருத மொழியின் வசம் சிறைப்பட்டுக் கிடந்த சினிமாவை, முதலில் ‘அறிஞர்’ அண்ணாவும்; அவரைத் தொடர்ந்து கலைஞரும் மீட்டெடுத்தனர்! இவர்கள் வருகைக்குப் பிறகுதான் தமிழ் சினிமா, வசனகர்த்தாக்கள் வசம் வந்தது! ஆகவே, அடுக்கு மொழியலங்காரத்தோடு, அழகுத் தமிழில் கலைஞர் எழுதும் வசனங்களை தெள்ளத் தெளிவாய் பேசுவதற்கு திறமையான நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அந்தத் தகுதி கொண்ட நாயகர்களாக அப்போது சிவாஜியும் - எம்.ஜி.ஆரும் மட்டுமே இருந்தார்கள்!

எனவே இவர்களுக்காகவே சிறப்புக் கவனமெடுத்து வளமான வசனங்கள் எழுதப்பட்டன. அந்த அடிப்படையில் தான் ‘மனோகரா’ பட வசனங்கள் அமைந்தன. ‘மனோகரா’ வெளிவருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, விளம்பரங்களில் இயக்குனர் எல்.வி.பிரசாத்தின் பெயர் பெரிய எழுத்துகளில் இருந்தது. ஆனால், படம் ரிலீஸாகி அதன் வசனங்கள் ரசிகர்களை மிகவும் வசீகரித்ததால், உடனே கலைஞரின் பெயரை பெரிய எழுத்தில் போட்டு; இயக்குனர் பெயரை கடுகளவுக்கு மாற்றி விளம்பரம் செய்தார் ‘ஜூபிடர் பிக்சர்ஸ்’ படக் கம்பெனி முதலாளி!

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!

“உனக்கு விளம்பரம் கிடைத்தபிறகு உன் பெயரை டைட்டிலில் போடுகிறேன்” என்று சொன்ன அதே ‘ஜூபிடர் பிக்சர்ஸ்’ கம்பெனி முதலாளி, கலைஞரின் வசன வீச்சுக்குக் கிடைத்த வரவேற்பை தானும் பயன்படுத்த நினைத்து, ‘மனோகரா’வுக்கு கலைஞரை வசனம் எழுத வைத்திருந்தார். ஒரு காலத்தில் டைட்டில் கார்டில் பெயர் போட மறுத்த அவரே முன்வந்து, கலைஞரின் பெயரை பெரிய எழுத்தில் போட்டு விளம்பரம் செய்யும்படியானது!

தேசியக் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதி மக்கள் மத்தியில் பிரபலமான  ‘மலைக் கள்ளன்’ நாவல் தன்னைக் கவர்ந்ததால், அதை திரைப்படமாக எடுக்க முன்வந்தார் ‘பட்சி ராஜா ஸ்டூடியோ’ அதிபர் ஸ்ரீராமலு நாயுடு. தமிழ் சினிமாவுக்கு தனது வசனத்தின் மூலம் வளம் சேர்த்து வந்த கலைஞருக்கு அப்போது சினிமா உலகத்தில் தனி சிம்மாசனமே தரப்பட்டிருந்தது! அவர் பேனா பிடித்த படங்களுக்கு உத்திரவாதமான வெற்றி என்கிற சூழ்நிலை இருந்தது!

ஆகவே,  ‘மலைக்கள்ளன்’ கதைக்கு, கலைஞர் தன் முழுத் திறமையையும் காட்டி திரைக்கதை - வசனம் தீட்டினார். ‘மலைக்கள்ளன்’ படத்துக்கு கலைஞரின் பேனா, படத்தை தாங்கிப் பிடித்த தூணாக இருந்தது!

எம்.ஜி.ஆர். – சிவாஜி போன்ற தன் தலைமுறைக் கலைஞர்களோடு வெற்றிகரமாக பயணம் செய்த கலைஞர், ஜெய்சங்கர், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற அடுத்த தலைமுறைக் கலைஞர்களோடும், பிறகு வந்த பிரசாந்த், பா.விஜய் போன்ற இளம் தலைமுறைக் கலைஞர்களோடும் தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்தார். ‘தூக்குமேடை’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’, ‘பாசப்பறவைகள்’, ‘காவலுக்கு கெட்டிக்காரன்’ படங்கள் சில உதாரணம்.

கலை வழியாக முத்தமிழறிஞரின் முதல் போர்  : ‘கலைஞரும் சினிமாவும்’!

ஆட்சி பீடத்தில் இருக்கும்போது மட்டும் சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கும் கலைஞர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது அரசியல் பணிகளுக்கிடையே சினிமாவிலும் தனது பங்களிப்பைச் செலுத்தத் தவறியதில்லை. ‘ராஜகுமாரி’ தொடங்கி, ‘பொன்னர் சங்கர்’ வரை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு என கிட்டத்தட்ட 75 படங்களில் கலைச்சேவை செய்திருக்கிறார். ஒவ்வொரு படமும் தனித்துத் தெரியும் முத்துக்களே!

எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்க, முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் 1970ல் வந்த,   ‘எங்கள் தங்கம்’ படத்துக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - கலைஞர் நட்பில் விரிசல் விழத்தொடங்கியது. அதனால், இனி படங்களே தயாரிக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு வந்தார் முரசொலி  மாறன். ஆகவே, எம்.ஜி.ஆருக்கு மாற்றாக தன் மகன் மு.க.முத்துவை, ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தில் ஹீரோவாக களம் இறக்கிவிட்டார் கலைஞர். சொந்தக் குரலில் பாடி, எம்.ஜி.ஆர் பாணியிலேயே நடித்து, ரசிகர்களை கவர்ந்த மு.க.முத்து தொடர்ந்து  ‘பூக்காரி’, ‘அணையா விளக்கு’ என ஒரு ரவுண்ட் வந்தார்.

பிறகு, அந்த இடத்தில் ஜெய்சங்கரை வைத்து அழகு பார்த்த கலைஞர், தனது பூம்புகார் புரடெக்ஷன்ஸ் பட நிறுவனம் மூலம்  ‘வண்டிக்காரன் மகன்’, ‘ஆடு பாம்பே’, ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களை தயாரித்து, அதற்கு திரைக்கதை, வசனமும் எழுத, அந்தப் பட வசனங்களில்  ‘அரசியல் அனல்’ அடித்தது.

கலைஞரின் வசனங்களை பேசும் பாக்கியம் கிடைக்காதா? என்கிற ஏக்கத்தில் பலரும் இருக்க, இளம் தலைமுறை நடிகர்களான பிரசாந்த்துக்கு  ‘பொன்னர் சங்கர்’ படத்திலும், கவிஞர் பா.விஜய் – குஷ்பு ஆகியோருக்கு ‘இளைஞன்’ என்கிற படத்திலும், நடிகை மீனாவுக்கு ‘கண்ணம்மா’ என்கிற படத்திலும், நடிகை மீரா ஜாஸ்மினுக்கு  ‘பெண் சிங்கம்’ திரைப்படத்திலும் கலைஞரின் வசனங்களைப் பேசும் பாக்கியம் கிடைத்தது.

கலைஞரைப் பொறுத்தவரை முதுமையில் கூட அவரின் எழுத்தில் இளமையும், புதுமையும் விளையாடியது.  ‘பொன்னர் சங்கர்’, ‘இளைஞன்’, ‘பெண் சிங்கம்’ ஆகிய படங்களின் வசனங்களே அதற்குச் சாட்சி. அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, தமிழர்களுக்கும், தமிழுக்கும் இவர் ஆற்றிய தொண்டு காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் கல்வெட்டுகள் தான். நிச்சயமாக, கலைஞர் ஒரு சகாப்தம் தான்!

- சுரேஷ்

banner

Related Stories

Related Stories