சினிமா

“தன் வரிகளால் என்றும் வாழ்வார் வாலி” : வாலி நினைவு தின சிறப்புக் கட்டுரை !

வயதுக்கும் வரிக்கும் சம்பந்தமில்லாத காவியக் கலைஞன் வாலி. 80 வருட அனுபவத்தை பாடலாய் தந்துவிட்டுச் சென்ற பேனாக்காரருக்கு இன்று நினைவு நாள்.

“தன் வரிகளால் என்றும் வாழ்வார் வாலி” : வாலி நினைவு தின சிறப்புக் கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கவிஞர் வாலி - பிஞ்சிலே பழுத்தவர் அல்ல இவர், பழுத்தும் பிஞ்சாகவே இருந்தவர். எப்படி இத்தனை இளமை இவரது வரிகளில் என்பதே பலரின் ஒற்றைக் கேள்வியாக இருக்கும். அது தான் வாலி. காலத்தை பேனாவால் வரிகளாக்கியவர். வயதுக்கும் வரிக்கும் சம்பந்தமில்லாத காவியக் கலைஞன். ஜிப்பா அணிந்த ஷெல்லியாய், வெள்ளை வேட்டி நியூட்டனாய், தாடியே கூந்தலாய் நமக்கு தெரிந்த கவிஞன் அவர். 80 வருட அனுபவத்தை பாடலாய் தந்துவிட்டுச் சென்ற பேனாக்காரருக்கு இன்று நினைவு நாள்.

ரேடியோ யுகத்தில் ஒலிக்கும் எம்.ஜி.ஆர். பாடலில் துவங்கி யூடியூப்பில் தெறிக்கும் சிவகார்த்திகேயனின் பாடல் வரை எழுதிச் சென்ற நூற்றாண்டு தாண்டிய கவிஞன். புதுப்புது வார்த்தைகளையும், வரிகளையும் சமைத்து டிரெண்டுக்கு ஏற்றது போல் பாடல் எழுதுவது அத்தனை சுலபமல்ல. அதை வசமாக்கியது, எழுத்தின் மீது வாலி கொண்ட காதலின் வெளிப்பாடே. ஸ்ரீரங்கத்து ரங்கராஜனை சினிமாவில் பாடல் எழுதுவதற்காக சென்னை அழைத்துவந்தவர் டி.எம்.செளந்தரராஜன் தான். அழகர் மலைக் கள்ளன் படத்துக்காக 1958ல் முதல் பாடலை எழுதுகிறார். அதை பி.சுசிலா பாடுகிறார்.

தொடர்ந்து, சந்திரகாந்த், இதயத்தில் நீ, நல்லவன் வாழ்வான் என பல பாடல்கள் எழுதியிருந்தாலும் 1963ல் வெளியான கற்பகம் படத்தில் வரும் ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான்...’ பாடலே வாலியை வெளிச்சத்துக்கு முன் நிறுத்துகிறது. அப்பாடலை கேட்ட பின், வாலியை தன்னுடைய கலையுலக வாரிசாகவே அறிவிக்கிறார் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் , விஜய் - அஜித், சிம்பு - தனுஷ், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி என ஐந்து தலைமுறைக்கும் பாட்டிசைத்த கவிஞன் வாலி. இப்படியான சிறப்பு எந்தக் கவிஞனுக்கும் கிடைத்திடாத பெரும் கொடை. அதுபோல எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் தலைமுறை தாண்டி இசையில் பாடலை நுழைத்துவிட்டார்.

“தன் வரிகளால் என்றும் வாழ்வார் வாலி” : வாலி நினைவு தின சிறப்புக் கட்டுரை !

நடிகனை ரசிகன் விரும்ப, பின்பற்ற, கொண்டாட முக்கிய காரணமாய் அமைவது ஹீரோவின் ஓபனிங் பாடல் தான். அப்படி ஹீரோவை உயர்த்தி விட்டதில் இவரின் வரிகளின் பங்கு அதிகம். இன்ட்ரோ பாடல், காதல் பாடல், ரொமான்டிக் பாடல்கள், சோக பாடல்கள், தன்னம்பிக்கை தரும் பாடல் என எதுவென்றாலும் சொன்ன கணத்தில் பாடல்களை எழுதுவதில் வல்லவர். எம்.ஜி.ஆருக்கு ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ , ‘கண்போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா’ என வரிகளை தந்தவர். அதுமட்டுமின்றி “ கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்” என டி.எம்.எஸ் குரலுக்கு வலு சேர்த்த அற்புத வரிகள் எத்தனையோ தந்திருக்கிறார்.

தளபதி என்கிற பெயருக்கும் வாலிக்கும் நெருக்கம் அதிகம். வாலி இயற்றிய முதல் நாடகத்தின் பெயர் தளபதி. ரஜினி நடித்த தளபதி படத்தின் அத்தனை பாடல்களும் இவரின் வரியில் உயிர்பெற்றிருக்கும். யமுனை ஆற்றிலே, ராக்கம்மா கையத்தட்டு, சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, காட்டுக்குயிலு மனசுக்குள்ள என ஒவ்வொரு பாடலும் கிளாசிக் ரகம். ‘தசாவதாரம்’ படத்தில் 'ராஜ லட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன்தான் ஸ்ரீனிவாசன் சேய்’ என்று கமல்ஹாசனுக்கான வரியை எழுதிவிட்டு, அடுத்த வரியில் 'நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான்... ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்’ என்று தன்னையும் உட்புகுத்தி, வரிகளில் விளையாடுபவர்.

அரை நூற்றாண்டின் திரையிசைப் பாடல்களை ஆய்ந்து பார்த்தால் அதில் வாலியின் அத்தியாயங்கள் அதிகமாய் நிறைந்திருக்கும். ஆம், கடல் போல பாட்டிசைத்துவிட்டார். 1968ல் பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த எதிர்நீச்சல் படத்துக்கும், இப்போது சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சலுக்கும் என காலத்தை பேனாவால் ஒன்றினைத்தவர் வாலி அவர்கள். சோற்றுக்காக பாடல் வரிகட்டிய நான், எம்.எஸ்.வி-யுடன் சேர்ந்த பிறகு தான் வருமான வரி கட்ட ஆரம்பித்தேன்! என்று நக்கலடித்தவர், கண்ணதாசன் இறந்தபோது, `எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ கண்ணீர் வரிகளை சொன்னவர்.

“தன் வரிகளால் என்றும் வாழ்வார் வாலி” : வாலி நினைவு தின சிறப்புக் கட்டுரை !

கலைஞர் கருணாநிதிக்கும் வாலிக்குமான நட்பு அத்தனை அழகானது. “நீ தடியில்லாத பெரியார்; பொடியில்லாத அண்ணா , இருவரும் உன் உருவில் இருக்கிறார்கள் ஒண்ணா!” என கலைஞரை குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமா, கலைஞர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கடவுள் நம்பிக்கை இல்லாத கலைஞரையே, ‘அறிவாலயத்தில் வீற்றிருக்கும் பகவானே” என்று கூறி கலைஞரின் கைதட்டை பெற்றவர்.

எதுகை மோனையில் பல மேடைகளில் கலைஞரை கொஞ்சியிருக்கிறார். தமிழில் எழுதிய அத்தனை கிளாசிக் அம்மா செண்டிமெண்ட் பாடல்களும் இவர் எழுதியது தான். “அம்மா என்றழைக்காத உயிரில்லையே..”-வில் துவங்கி “காலையில் தினமும் கண் விழித்தால்..” வரை தாயை உருக வைத்த கவிஞன்.

திரைத்துறையில் யார் மீதும் முகம் சுழிக்காதவர், அனைவரிடமும் நட்பு பாராட்டியவர், எந்த தருணத்திலும் கிண்டலையும், நகைச்சுவையையும் விட்டுக் கொடுக்காதவர். பாடல் எழுத வயது என்றைக்குமே தடை இல்லை என்பவர். கவிஞர் என்றால் தனிமையில் பாட்டு எழுதுவார். கான்செப்ட் பிடிக்க வெளியூருக்கு செல்வார் என்பதெல்லாம் வாலியிடம் ஆகாது.

எந்தப் புற தொந்தரவு இருந்தாலும், கதை கேட்ட கணத்தில் பாடலை எழுதிக் கொடுக்கும் திறமை கொண்டவர் வாலி. கவித்துவமான வரிகளை எழுதுவது கவிஞனின் வேலை. ஒரு பாடலாசிரியனின் வேலை என்பது, பாடலின் சந்தத்துக்குப் பொருந்தும் வார்த்தைகளைக் கோர்ப்பது. அதில் வாலி தான் சிறந்தவர். (அழகிய தமிழ்மகள் இவள் - ரிக்‌ஷாக்காரன், என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா, எண்ணம் எங்கும் ஒட்டிவெச்சேன் வண்ண வண்ண சித்திரமா - ஆசை).

“தன் வரிகளால் என்றும் வாழ்வார் வாலி” : வாலி நினைவு தின சிறப்புக் கட்டுரை !

எதுகை மோனை வைத்து பாட்டு பின்னுவதிலும், விசித்திரமான வார்த்தையையும் அதில் உள்ளே சேர்த்து இசையமைப்பாளரையே ஆட்டம் காண வைப்பதிலும் வான் தாவும் வாலி. ‘அக்கடான்னு நாங்க உட போட்டா துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா’, இது ஒரு பக்கம் என்றால், அங்கம் தங்கம் மிருதங்கம், வச்சிப்பாரு கச்சேரி மெல்ல தான் மெல்ல தானே மெத்தை தான் கட்ட தானே” என ரொமான்ஸிலும் அசரடிப்பார்.

நூற்றாண்டு தாண்டியும் இவரின் வரிகள் இப்போதும் நம்மோடு பொருந்திப் போவது வாலியின் அசாத்திய சிந்தனை. “ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்…” என அவரின் வரிகள், இன்றைய மீனவர்களின் வாழ்க்கைக்கும் பொருந்தும். “உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்… என்றும் எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்றும் காலத்துக்கு ஏற்ப நம்பிக்கை வரிகளை தந்தவர்.

எதற்கெடுத்தாலும் ட்ரெண்டிங்... ட்ரெண்டிங் என அடித்துக்கொள்ளும் இந்த உலகில் எப்போதைக்குமான ட்ரெண்டிங் வாலி தான். தெள்ளுதமிழும் பாடியவன், துள்ளுதமிழும் பாடியவன், வரிகள் உள்ளவரை வாழ்வான் வாலி.

Related Stories

Related Stories