உலகம்

ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !

கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி என்ற பேட்டரில் ஈரானில் நிலவிவந்த முகமது ரிசா ஷா ஆட்சியை அகற்றி ருஹல்லா அலி கொமேனி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தது. அதன் பின்னர் மதவாத அடக்குமுறைகள் அதிகரித்தன.பெண்கள் முக்காடு அணியவேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சமீபத்தில் பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு அரசால் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் தீவிரமான கண்காணிக்கப்பட்டனர். இந்த சிறப்பு பிரிவு படையினரால் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார்.

சிறையில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆட்சிக்கு எதிராக பெண்கள் கொதித்தெழுந்தனர். முக்கிய நகரங்களில் பெண்கள் வெளிப்படையாகவே ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடிகளை அறுத்து எறிந்தனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அரச படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த போராட்டத்தை தொடர்ந்து தற்காலிகமாக பொது வெளியில் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்தும் அறநெறி காவல்துறை என்ற பிரிவை ஈரான் அரசு கலைத்து உத்தரவிட்டது. இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளாடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவி ஒருவர் ஹிஜாப்பை சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு படையினர் அந்த மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கி ஹிஜாபை முறையாக அணிய கூறியுள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ல்கலைக்கழக வளாகத்திலேயே தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் சுற்றித்திரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்று எந்த விவரத்தையும் ஈரான் அரசு தெரிவிக்காத நிலையில், அவரை விடுவிக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!