உலகம்

“பதில் தாக்குதல் நடத்த வேண்டாம், எங்கள் ஆதரவு இஸ்ரேலுக்குதான்” - ஈரானுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை !

இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. காசா மீது வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தரைவழியாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போதுவரை 41 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதில் ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஹசன் நஸ்ருல்லாவின் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் ஈரான் இஸ்ரேல் மீது பிரமாண்டமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு விரைவில் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த வாரம் ஈரானின் ராணுவத்தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இது மத்திய கிழக்கு பகுதியில் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்துக்கு கமேனி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். இதை மீறி தாக்குதல் நடந்தால் எங்கள் ஆதரவு இஸ்ரேலுக்கு தான். பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டாம் என்று ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Also Read: மீண்டும் வெடிக்கும் சீக்கியர்கள் விவகாரம்: அமித் ஷா மீது கனடா அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு -பின்னணி என்ன?