உலகம்

இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ராணுவ அதிகாரிகளே முடிவு செய்யலாம் - ஈரான் உச்சபட்ச தலைவர் அறிவிப்பு !

இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. காசா மீது வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தரைவழியாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போதுவரை 41 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதில் ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஹசன் நஸ்ருல்லாவின் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் ஈரான் இஸ்ரேல் மீது பிரமாண்டமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

israel attack on iran

இந்த தாக்குதலுக்கு விரைவில் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் ராணுவத்தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இது மத்திய கிழக்கு பகுதியில் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் ராணுவ அதிகாரிகளே முடிவு செய்யலாம் என ஈரான் அரசின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவோ, குறைத்துக் கூறவோ கூடாது. அதே நேரம் ஈரானின் சக்தியை இஸ்ரேலுக்கு காட்ட வேண்டும். அந்த சக்தியை எப்படிக் காட்டுவது? தாக்குதலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது? ஈரான் நலனுக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து ஈரான் ராணுவ அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.

Also Read: உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது: வினிசியஸ் ஜூனியரிடமிருந்து மயிரிழையில் நழுவிய 'பாலன் டி ஓர்' விருது