உலகம்

ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் என கருதப்பட்டவரும் கொலை : இஸ்ரேல் தாக்குதலை உறுதிப்படுத்திய ஹிஸ்புல்லா !

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகிறது .

அவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பின் உச்சபட்ச தலைவரும் அந்த அமைப்பின் பொதுசெயலாளருமான ஹசன் நஸ்ருல்லாவும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்தது.

hashim safiuddin

இந்த நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாவின் வாரிசாக கருதப்பட்டரும், ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹஷேம் சபிதீனை கொலை செய்யப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளது. இம்மாத துவக்கத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹஷேம் சபிதீன் உள்ளிட்ட முக்கிய ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது. ஆனால் இதனை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்யாமல் இருந்த நிலையில், நேற்று அவர் இறந்ததை உறுதி செய்துள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், ”பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் நிர்வாகக் குழு தலைவர் ஹஷேம் சபிதீன், அதன் புலனாய்வு இயக்குனரக தலைவர் அலி ஹுசைன் ஹசிமா உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: ஆதார் அட்டையை வயது, பிறந்த தேதிக்கான அத்தாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !