உலகம்

ஆயுதம் தர முடியாது என மறுத்த பிரான்ஸ்... பிரெஞ்சு எரிவாயு நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்: விவரம் என்ன ?

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகிறது .

ஹசன் நஸ்ருல்லா

அவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பின் உச்சபட்ச தலைவரும் அந்த அமைப்பின் பொதுசெயலாளருமான ஹசன் நஸ்ருல்லாவும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்தது.

அதோடு நிற்காத இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினர் செயல்படும் லெபானானின் மீது படையெடுத்துள்ளது. இதற்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஆயுத தடை விதிப்பதாக பிரான்ஸ் அறிவித்தது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எந்த தடையும் எங்கள் முன்னேற்றத்தை தடுக்காது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்ரில் செயல்பட்டு வரும் பிரெஞ்சு எரிவாயு நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதல் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்து எந்த விவரமும் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் அரசு பிரெஞ்சு நிறுவனங்கள் மீதானத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து இஸ்ரேல் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆசையாய் ரீல்ஸ் செய்த இளம்பெண்... ஒரு நொடியில் நேரந்த சோகம்... அதிகாலையில் நடந்த அதிர்ச்சி !